தமிழகம்

வேலூரில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் – தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு…

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரது மகனும், வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துரைமுருகனின் நண்பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வேலூர்:-

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கழகத்தின் ஆதரவு பெற்ற புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த வாரம் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்தில் ரூ.10 லட்சம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து துரைமுருகனின் நண்பரும், வர்த்தக பிரமுகரான சீனிவாசன் என்பவரது சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கு சாக்கு மூட்டையில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் துரைமுருகனின் உதவியாளர்வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணம் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்தது. அந்த பண கட்டுகளில் யாருக்கு இந்த பணம் என்று பெயர் குறிப்பிட்டு பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. ஆக சீனிவாசன் குடோனில் கைப்பற்றப்பட்ட பணம் தேர்தல் பணிகளுக்கு செலவு செய்வதற்காக கட்சிக்காரர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

அது மட்டுமல்ல துரைமுருகன் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகையில், எந்த பகுதியில் அதிக வாக்குகளை கட்சி பிரதிநிதிகள் பெற்றுத் தருகிறார்களோ அவர்களுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு தான் துரைமுருகனுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. இதனால் கட்சிக்காரர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த சில உள்குத்து வேலைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் வருமான வரித்துறை சோதனை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்தும், பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 125 ஏ என்ற பிரிவின் கீழ் அவர் மீதும், சீனிவாசன் என்பவர் மீது 171 பி என்ற பிரிவின் கீழும் மற்றும் துரைமுருகனின் நண்பர் தாமோதரன் மீது 171 ஏ,பி என்ற பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.