தமிழகம்

வேலூர் தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையர்களிடம் கழகத்தின் சார்பில் வலியுறுத்தல்

வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மற்றும் அவரது தந்தை வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு கட்டுக் கட்டாக பணத்தை பறிமுதல் செய்திருப்பதால் அத்தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையர்களிடம் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:-

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை கிராண்ட் சோழா ஓட்டலில் இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா ஆகியோர் தலைமையில் நேற்று மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக.பாஜக.தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அ.இ.அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.ஜெயக்குமார், ஜெ.சி.டி.பிரபாகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபு முருகவேல், பா.ஜ.க. சார்பில் திருமலைசாமி, தேமுதிக சார்பில் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசியது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நானும் ஜெ.சி.டி.பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோரும் கலந்து கொண்டு எங்கள் கட்சியின் கருத்தை தெரிவித்தோம். குறிப்பாக அஇஅதிமுக என்பது ஜனநாயகத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்டது. ஜனநாயகத்தை விட வலிமையானது உலகத்தில் எதுவும் கிடையாது.

அப்படித்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா ஆகியோரது வழியில் இன்றும் சுதந்திரமான, நியாயமான, நேர்மையான ஆகிய மூன்று கருத்துக்களை மையமாக வைத்து தேர்தலை நாங்கள் எப்போதும் சந்தித்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கொல்லைப்புற வழி தெரியாது. எங்களுடைய தலைவர்கள், தமிழக மக்கள் அளிக்கின்ற பேராதரவு, அம்மாவின் திட்டங்கள் ஆகியவற்றின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து மக்களை சந்திக்கிறோம்.

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி இப்படி இருக்கும் நிலையில் நேர்மாறாக திமுக தலைமையிலான கூட்டணி மக்களை நம்பாமல் கொள்கைகளை நம்பாமல் கொல்லைப்புற வழியாக மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த ஒரு லட்சத்து 76 ஆறாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தெளித்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.100 கோடி அளவிற்கு, முக்கியமான திமுக பிரமுகர்களின் இல்லங்களில், பூத் வாரியாக வைக்கப்பட்டுள்ள வீடியோ வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு வேண்டப்பட்டவரின் வீடியோவை பார்த்தாலே தெரியும். தொடர்ச்சியாக 10 அல்லது 15 நாட்கள் வேலை செய்தால்தான் அதுபோல கட்டுக் கட்ட முடியும். பூத் வாரியாக கட்டு போட்ட பணம் மொத்தம் ரூ.32 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுபோன்ற நிலை ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற நிலை இது. இதனை எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடாது. எனவே இதனை நாங்கள் வலியுறுத்தினோம்.

சுதந்திரமாக தேர்தல் நடக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட பணத்தை சுலபமாக கண்டுபிடிக்கலாம். எந்த வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டது. யார் பணத்தை வெளியே எடுத்தது. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கும் இந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்தவருக்கும் என்ன தொடர்பு. இதனை எல்லாம் நீங்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணம் வேட்பாளருக்கு சொந்தமானது என்று நிரூபிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் தெரிவித்துள்ளோம்.

கொடநாடு சம்பவத்தில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தடையாணை அளிக்கப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார். மேலும் உண்மைக்கு மாறான தகவல்களை சமூக ஊடகங்களிலே அல்லது மேடையில் பேசுவது குறித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கு அவர்கள் உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் நடைபெற்ற சோதனைக்கும், அஇஅதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏட்டிக்கு போட்டியாக திமுக இதனை தெரிவிக்கிறது. துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று, அதே தொகுதியில் பணம் பிடிபடும்போது இது குறித்து திமுகவினர் எந்த ஆணித்தரமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து விசாரணை செய்யும்போது நிச்சயமாக உண்மை வெளிவரும். இதற்கு ஏட்டிக்கு போட்டியாக யார் வீட்டில் நடைபெற்ற சோதனையை எங்கள் கட்சியுடன் தொடர்புபடுத்துவது முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சுப்போடும் கதையாகத்தான் இருக்கிறது. நாங்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறோம். இதனை முழுமையாக விசாரணை செய்யவேண்டியது தேர்தல் ஆணையம்தான்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் அவரின் கல்லூரி பைல் இருந்துள்ளது. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். இதனை மையமாக வைத்துத்தான் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவரும். சென்னையில் அவ்வப்போது மக்கள் வீடுகளை மாற்றிச்செல்வார்கள்.

அவர்களுக்கு பழைய இடத்தில் ஓட்டு இருக்கும். புதிய இடத்தில் ஓட்டு இருக்காது. இவர்களை இனம் கட்டு இவர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம். தற்போது காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்க வேண்டியது ஆணையம். இந்த நிமிடத்தில் தேர்தலை அறிவித்தால் நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தே.தி.மு.க. சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிவாணன் கூறியதாவது:-

முரசு சின்னமும், பேஸ்கட் சின்னமும் ஒரே மாதிரி உள்ளதால் பேஸ்கட் சின்னத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு அளித்துள்ளோம். அதனை மீண்டும் நினைவுப்படுத்தினோம். மேலும் சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். வேலூரில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனையில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர தேர்தலை நிறுத்தக்கூடாது என்று எங்கள் தலைவர் குறிப்பிட்டுள்ளதை இங்கு தெரிவித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. திருமலைசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் போட்டியிடக்கூடிய வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் விநியோகிப்பதற்காக கட்டுக்கட்டாக பிரித்து வாக்குச்சாவடி எண் போட்டு சாக்குப் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய வேண்டும். மீண்டும் அவர் போட்டியிடாதா அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

எங்கள் கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்திற்கு சென்றபோது சில பயங்கரவாத சக்திகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். வேட்பாளருக்கு காயம் ஏற்படவில்லையே தவிர, உடன் சென்ற அஇஅதிமுக கிளை செயலாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபோன்ற வன்முறைகள் வருகின்ற நாட்களிலும் ஏற்படலாம் என்பதை தெரிவித்து எங்களின் வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வாக்குச்சாவடிக்கு உள்ளே மற்றும் வெளியே வெளி மாநில போலீசார் அல்லது துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்பதை
தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.