சிறப்பு செய்திகள்

வேலூர் தி.மு.க. வேட்பாளர் வீடுகளில் வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கிடையாது – பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்….

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் எந்த கட்சி வேட்பாளர்களின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்றும், அத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் அவர்கள் அந்த பணியை மேற்கொண்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையை சிலர் தவறாக விமர்சிக்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் அந்த வருமான வரித்துறை சோதனையை ஆளும்கட்சியுடன் முடிச்சுப் போடுகிறார்கள். இதுபோன்ற வருமான வரி சோதனைகள் எல்லாம் சட்டப்படி தான் நடந்துள்ளது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில் எந்த வருமான வரி சோதனையும் நடத்தப்படவில்லை.

போபால் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார். பயங்கரவாதத்தை மதத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைத்து பேசுபவர்களுக்கு அவரது தேர்தல் போட்டி நிச்சயம் பதிலளிப்பதாக இருக்கும். வங்கிகளில் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் கோச்சி போன்றவர்கள் தங்களது கடனை இந்த ஆட்சியில் திருப்பி கொடுத்தே தீர வேண்டிய நிலை உருவாகி இருப்பதை உணர்ந்துள்ளனர். அதனால் தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டார்கள். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

பா.ஜ.க. இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 2014-ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட இந்த முறை கூடுதல் வெற்றி கிடைக்கும். பா.ஜ.க.வுக்கு அறுதி பெரும்பான்மை கிடைப்பது நிச்சயம். கடந்த 5 ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதல், வெடிகுண்டு கலாச்சாரங்கள் எதுவும் நடைபெறவில்லை. அதுவே எங்களது ஆட்சித் திறமைக்கு ஒரு சான்றாகும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் இருந்து வந்தது. மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி அப்போது சரியான பதிலடி கொடுக்காதது வருந்தத்தக்கது ஆகும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.