சிறப்பு செய்திகள்

வேளாண்மைத்துறைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் : சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து துணை முதல்வர் உரை…

தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். நிதி நிலை அறிக்கையில் வறுமை ஒழிப்பு, நெடுஞ்சாலைத்துறை, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதித்துறை போன்றவற்றிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்ட நிதி அமைச்சர், வேளாண்மைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

சென்னை:-

தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  2019-2010-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றத்தினால் 2018-19-ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடியில் இருந்து நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும், 2017-18-ம் ஆண்டில் 9.07 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் வளர்ச்சி 2018-19-ம் ஆண்டில் 14 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

2019-20-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய பயிர்களையும், பகுதிகளையும் சேர்க்க அரசு அறிவிக்கை செய்ய உள்ளது. இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணத்தில் மாநில அரசின் பங்கு தொகைக்காக ரூ.621.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ரூ.1361 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்ககத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை அரசு ஏற்படுத்தும். அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்றளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.

2019-20-ம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விவசாயிகளுக்காக ரூ.10,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டிருப்பதோடு பயிர்க்கடன்கள் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்திக்கடவு- அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ரூ.1000 கோடி இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பான வாங்கும் திறனுக்கேற்ற வீட்டு வசதியும், அடிப்படை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்வதுடன் குடிசை பகுதிகளை மாற்றி நகர்ப்புற வீட்டுவசதி குடியிருப்புகளாக மாற்றப்படும். நடப்பாண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்காக ரூ.6265.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1031.53 கோடி இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளி கல்வித்துறைக்காக 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.

இந்த வரவு செலவு திட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு எளிதில் மருத்துவ வசதிகள் பெறுவதை உறுதி செய்வதற்காக உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.12,563.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.