தற்போதைய செய்திகள்

வேளாண்மை துறையின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10,550.85 கோடி ஒதுக்கீடு…

சென்னை

வேளாண்மை துறையின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10,550.85 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்றளவும் வேளாண்மையே வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாமல், சமச்சீரான வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதிலிருந்து, பண்ணை உற்பத்தித்திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்குவது என வேளாண்மைத் துறை மேம்பாட்டிற்கான உத்தி தற்போது மாறியுள்ளது. நாட்டின் முக்கியமான கவலைக்குரிய பிரச்சினையாக விவசாயிகளின் துயரம் உருவாகியுள்ளது.

தமிழகத்திற்கும் இது பொருந்தும். இப்பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் திட்டங்கள் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும். பயிர் சாகுபடியில் 79.38 இலட்சம் நில உடமைகள் நமது மாநிலத்தில் உள்ளன. அவற்றில், 92.51 சதவீத நில உடமைகளில் சிறு, குறு விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். சிறிய நில உடமைகள், பருவநிலை மாற்றத்தால் சாகுபடியில் ஏற்படும் பாதிப்பு, உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள், விலை ஏற்றத்தாழ்வின் மூலம் ஏற்படும் பாதிப்புகள், அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படக்கூடிய இழப்பு போன்ற பல்வேறு சவால்களை விவசாயம் சந்தித்து வருகிறது. இந்தச் சவால்கள் ஒவ்வொன்றையும் திறம்பட எதிர்கொள்வதற்கான திட்டங்களை இந்த அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.

வெள்ளம் அல்லது வறட்சியால் விவசாயிகள் அடிக்கடி பயிர் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. பருவநிலை பாதிப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க 2016 ஆம் ஆண்டு முதல் ‘பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2018 2019-ம் ஆண்டில், இதுவரை 21.70 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, கடந்த மூன்று ஆண்டுகளில் உயரிய சாதனையாகும். 2019 2020 ஆம் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், புதிய பயிர்களையும், பகுதிகளையும் சேர்க்க இந்த அரசு அறிவிக்கை செய்ய உள்ளது. குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படும் இடர்பாடுகளான ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளோடு இடிமின்னலுடன் கூடிய திடீர் மழை மற்றும் இயற்கை தீயினால் ஏற்படும் பாதிப்புகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத்தில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக 621.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். நிகர பயிர் சாகுபடிப் பரப்பில் சுமார் 58 சதவீதப் பரப்பில் மட்டுமே பாசன வேளாண்மை நடைபெறுகிறது. எனவே, நீர் சேமிப்பை அதிகரித்து ஒவ்வொரு துளி நீருக்குமான உற்பத்தித் திறனை அதிகரிக்க, நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு இந்த அரசு தீவிரமான ஊக்கம் அளித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு, 2018 2019 ஆம் ஆண்டில் 1.80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் 1,361 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேலும் இரண்டு இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90 சதவீதம் மானியம் அளிக்கிறது. 2019-2020 ஆம் ஆண்டில், 84.09 கோடி ரூபாய் மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரை உள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2,000 பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

2016-2017 ஆம் ஆண்டிலிருந்து 802.90 கோடி ரூபாய் திட்டச் செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கத்தினால், இதுவரை 6.0 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயன்பெற்றுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில்
292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேலும் 400 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஒருங்கிணைந்த பண்ணைய முறை பல்வேறு வேளாண் தட்பவெப்ப மண்டலப் பகுதிகளில் 2018-2019 ஆம் ஆண்டில் முன்னோடித் திட்டமாக, அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, 2,500 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் மேலும் 5,000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் மாவட்டங்களில் 101.62 கோடி ரூபாய் திட்டச் செலவில் கூடுதலாக அமைக்கப்படும்.

பெரு விவசாயிகள் அடையும் பொருளாதாரப் பயன், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுதல் போன்ற பல்வேறு பயன்களை சிறு, குறு விவசாயிகளும் பெற 2017 2018-ம் ஆண்டில் புதுமை முயற்சியாக ‘கூட்டுப் பண்ணைய திட்டத்தை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியது. சிறு, குறு விவசாயிகள் கொண்ட, உழவர் ஆர்வலர் குழுக்கள் தொடங்கப்பட்டு, அத்தகைய உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படுகிறது. இறுதியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாகும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, மாநிலத்தில்

20,000 உழவர் ஆர்வலர் குழுக்களும், 4,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 483 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், அரசு மற்றும் நபார்டு வங்கி போன்ற இதர முகமைகள் மூலம் இதுவரை அமைக்கப் பட்டுள்ளன.  2019-2020 ஆம் ஆண்டில், 100.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிலைத்துச் செயல்பட அவற்றை ஒருங்கிணைப்பது அவசியத் தேவையாக உள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மாநில அளவிலும், மண்டல அளவிலும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஊக்கமளிக்க, தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. வேளாண் பொருட்களின் விலையில் உள்ள நிலையற்ற தன்மையால் வேளாண்மையின் நிலைத்தன்மை பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றது. அதிக உற்பத்தி சில நேரங்களில் விற்பனை விலையில் சரிவை ஏற்படுத்துகிறது. எனவே, முக்கியமான வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதற்கு இந்த அரசு

சிறப்பு முன்னுரிமை வழங்கி வருகிறது. சாதாரண ரகம் மற்றும் சன்ன ரகம் நெல்லுக்கு முறையே குவிண்டாலுக்கு கொள்முதல் விலையாக 1,800 ரூபாயையும், 1,840 ரூபாயையும் வரும் பயிர் பருவத்தில் இந்த அரசு வழங்கும். இதில் மாநில அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண ரகம் மற்றும் சன்ன ரகம் நெல்லுக்கு, முறையே குவிண்டாலுக்கு 50 ரூபாயும், 70 ரூபாயும் அடங்கும். 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகைக்காக 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ், பெரிய அளவில் உளுந்தை கொள்முதல் செய்யும் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2019-2020 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கரும்பிற்கு மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையினை விட கூடுதலாக 2018-2019 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகையானது, 2019-2020 ஆம் ஆண்டிலும் வழங்கப்படும். இதற்கென 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நியாயமான விலை நிர்ணயம் செய்யவும், விலை ஏற்றத்தாழ்வினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கும், சந்தை ஒருங்கிணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய வேளாண் மின்னணுச் சந்தை திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான மின்னணு வர்த்தகம், ஒருமுனை வரிவிதிப்பு மற்றும் ஒரே உரிமம் ஆகியவற்றை உள்ளடக்கி, 1987 ஆம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டமும் அதன்கீழான 1991-ம் ஆண்டு விதிகளுக்கும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், 23 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், 8 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க விற்பனை அரங்குகளிலும் பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகளையும் புதிய வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகள், மத்திய அரசின் உதவி மற்றும் நபார்டு வங்கி கடனுதவியுடன், 159.25 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, கூடுதலாக 70 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தேசிய வேளாண் மின்னணுச் சந்தை திட்டத்தின் கீழ்

2019-2020-ம் ஆண்டில் ஒருங்கிணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சேமிப்புக் கிடங்கின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு இந்த அரசு பெரிய அளவில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களிலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் கீழும், 9.42 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் கொள்ளளவு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண் தொழிலாளர்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சாகுபடி செலவுகளைக் குறைக்கவும் தமிழ்நாட்டில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு தீவிரமான ஊக்கம் அளிக்கப்படுகிறது. அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட 1,965 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்கெனவே மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களையும், 360 கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களையும் நிறுவவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக 172.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர் பரவலாக்கலின் ஒரு பகுதியாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தோட்டக்கலை விளைபொருட்களை விளைவிக்க பெருமளவில் ஊக்கமளிக்கப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் 10 மாவட்டங்களில் 482.36 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 62 முதன்மை பதப்படுத்தும் மையங்களிலும், 509 சேகரிப்பு மையங்களிலும், சேகரிப்பு, சந்தைப்படுத்துதல், சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் குளிர்பதன வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், மாநிலத்தில் அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பிற்கான பெரும் வசதிகளை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் சிறப்புத் திட்டம்

2019-2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இதற்கென 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் உண்மைத் தன்மையை சரிபார்த்து வில்லை ஒட்டிய காய்கறி விதைகளை உற்பத்தி செய்து, தேவைப்படும் இடங்களில் போதிய அளவு விநியோகிக்கப்படும். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டைய தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அதிகளவில் அமைத்திடவும், தற்போதைய வேளாண் வணிகச் சூழலை மாற்றி அத்தகைய தொழிற்சாலைகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

உணவு பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்பதையும், பிரான்ஸ் நாட்டு நிறுவனம் சென்னைக்கு அருகில் ஒருங்கிணைந்த உணவு பதப்படும் பூங்காவை 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பதையும் இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு பண்ணை சாரா வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக, மாபெரும் உணவு பதப்படுத்தும் பூங்காக்களை அமைக்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பதை வலுப்படுத்துவதற்காக, தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

மாநிலத்தில் பல்வேறு வேளாண் பருவநிலை மண்டலங்கள் உள்ளதால், ஏற்றுமதிக்கு ஏற்ற பல்வகை வேளாண் பயிர் சாகுபடி மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை இந்த அரசு உணர்ந்துள்ளதால், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்ககத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினைஇந்த அரசு ஏற்படுத்தும்.

இயற்கை வேளாண்மை மற்றும் பிற தரச்சான்றிதழ் அளித்தல், விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும். இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும் என்பதையும் இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலத்திற்கேற்ப மாறிவரும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வேளாண்மைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். 2011 ஆம் ஆண்டு முதல் நான்கு புதிய கல்லூரிகளைத் தொடங்கியும், 23 புதிய தனியார் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளித்தும், வேளாண்மைக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை விரிவுபடுத்துவதில் மாநில அரசு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 2019-2020 ஆம் ஆண்டில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் தோட்டக்கலைக்

கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக 79.73 கோடி ரூபாய் செலவிடப்படும்.
2019 2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்காக 87.22 கோடி ரூபாய் உட்பட வேளாண்மைத் துறைக்கு 10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.