தற்போதைய செய்திகள்

வேளாண் மண்டல சட்ட மசோதாவை ஆதரிக்காமல் சட்டசபையில் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது ஏன்? கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி

காஞ்சிபுரம்

வேளாண் மண்டல சட்ட மசோதாவை ஆதரிக்காமல் சட்டசபையில் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது ஏன்? என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மத்திய (செங்கல்பட்டு) மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன், கே.மரகதம் குமரவேல், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வி.வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் எ.எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மாவட்ட கழக பொருளாளர் பி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.எஸ்.ராஜி, கோ.அப்பாதுரை, பி.சுப்பிரமணி, இ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கவுஸ் பாஷா, தையூர் எஸ்.குமரவேல், நகர கழக செயலாளர்கள் டி.எஸ்.ரவிக்குமார், வி.ரவி, வி.ஆர்.செந்தில்குமார், பேரூர் கழக செயலாளர்கள் எ.கணேசன், எ.சீனுவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

மனித நேயத்தோடு எண்ணற்ற புதிய புதிய திட்டங்களை புரட்சித்தலைவர் கொண்டு வந்தார். அவற்றில் கிராமங்கள் தோறும் சாலை வசதி, பள்ளிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர், ஆண்டுதோறும் தாய்மார்களுக்கு புடவை, முதியோர்களுக்கு ஓய்வூதியம், சத்துணவு திட்டம் என புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தார்.

புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு சுமார் 16 லட்சம் தொண்டர்களாக இருந்த இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றியமைத்து நல்லாட்சி வழங்கினார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடை, காலணிகள், எழுதுபொருட்கள், நோட்டு புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன் மடிகணினியை அம்மா அவர்கள் வழங்கினார். கழக அரசின் திட்டங்களால் கல்வி பயின்றவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர்.

இதயதெய்வம் அம்மாவின் மறைவிற்கு பின்பு இந்த இயக்கத்தை வீழ்த்தி விடலாம் என கனவு கண்ட ஸ்டாலின் ஏமாந்து போனார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான நல்லாட்சியை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது.

பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கும் வகையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலாற்றில் தடுப்பணைகளே இல்லாமல் இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்தார். அவற்றில் வாயலூர், வள்ளிபுரம் ஆகிய இரண்டு தடுப்பணைகள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தார். மேலும் அது சட்டமாகவும் இயற்றப்பட்டது. சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் ஆதரிக்காமல் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது ஏன்? மு.க.ஸ்டாலினால் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக மக்களின் தேவைகளை கழக அரசு சிறப்புடன் நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
கூட்ட முடிவில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.விஜயரங்கன் நன்றி கூறினார்.