தமிழகம்

ஸ்டாலினின் அரசியல் சகாப்தம் விரைவில் முடிவுக்கு வந்து விடும் – முதலமைச்சர் கடும் எச்சரிக்கை…

கோவை:-

பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஸ்டாலினின் அரசியல் சகாப்தம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி நேற்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்தும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்தும் ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறித்து பேசியிருக்கிறார். அந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கக்கூடிய துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். பொள்ளாச்சி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகார் கிடைக்கப்பெற்றவுடன் காவல் துறையினர் மூலமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் உடனடியாக மாநில குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதோடு தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வழக்கு தற்போது மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மீது எப்போதும் அக்கறையுள்ள அம்மாவின் அரசு பெண்களின் முழு பாதுகாப்பிற்கும் அவர்களின் உரிமைகளை காப்பதற்கும் மாநில அளவில் தனியாக காவல்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவில் மூன்று காவல் கண்கணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையும் இக்குழு மேற்கொண்டு வருகிறது.

16.12.2012 அன்று மருத்துவ மாணவி ஒருவர் சில நபர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து நாட்டிலேயே முதன் முதலாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 13 அம்சங்கள் கொண்ட ஒரு திட்டம் ஒன்றை அறிவித்து அந்த திட்டம் தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அம்மாவின் அரசு. பொள்ளாச்சி சம்பவத்திலும் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை அம்மாவினுடைய அரசு எடுக்கும். உண்மை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சி சம்பவத்தை மீண்டும் மீண்டும் மேடையிலே பேசி மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார். ஒரு பாலியல் சம்பவம் நடைபெற்றால் அந்தச் சம்பவம் குறித்து அரசு உரிய முறையில் விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் ஒரு எதிர்கட்சித் தலைவர் தெரிவிக்க வேண்டுமேயொழிய அந்த சம்பவத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார். இது மனிதத் தன்மைக்கு நேர்மாறான செயலாகும்.

இது போன்ற அரசியலை பொதுமக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இக்கொடுஞ் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுடன் திமுக மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் மகன் தென்றல் மணிமாறன் தொடர்பில் இருப்பதாக குறித்து பத்திரிகையிலே செய்தி வந்திருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினாரா? எனவே, அம்மாவின் அரசு எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களை வைத்து ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட நினைத்தால் அதோடு உங்களது அரசியல் சகாப்தம் முடிவுக்கு வரும்.

கொடநாடு கொலை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கட்டுக்கதை கட்டிவருகிறார். கொடநாடு கொலை சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததே இந்த அரசு தான். கேரளமாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்டார்கள். இந்த கூலிப்படையினர் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற கொடுங்குற்றங்களை புரிந்தவர்கள். இந்த கூலிப்படையில் உள்ள சயன், மனோஜ் ஆகிய இரண்டு நபர்கள் குற்றவாளிகள் என காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அந்த சமயத்தில் ஸ்டாலின் ஆணையின் பேரில் தி.மு.க. நிர்வாகிகள் கொலை குற்றத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களுக்கு ஜாமீன் வழங்கி அவர்களை வெளிக்கொண்டு வருகிறார்கள். கூலிப்படையினரைச் சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கிய கட்சி தி.மு.க. ஸ்டாலின் இதுவரை தி.மு.க.விற்கு மட்டும் தலைவராக இருந்தார். தற்போது கூலிப்படைக்கும் தலைவராகிவிட்டார் என்றுதான் அறியமுடிகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அவர்களுக்காக வாதாடுகிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தை தீர்த்து வைப்பது அரசின் கடமை. கோடநாடு கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஸ்டாலினால் பரப்பப்பட்டு வருகின்ற ஒரு தவறான செய்தியாகும்.

ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பேசி வருகிறார். பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு தி.மு.க. கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை. தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் பெண்களை எப்படி மதித்து வருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும். தி.மு.கவினர் தான் பெண்கள் நடத்தக்கூடிய அழகு நிலையங்களுக்குச் சென்று அவர்களை அடித்து உதைக்கிறார்கள். ரயில் பயணத்தின் போது தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு நிர்வாகி சிறுமியிடம் சில்மிஷம் செய்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்று பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் கட்சிதான் தி.மு.க. இந்த கட்சி ஒரு மக்கள் விரோத இயக்கம். எனவே, அராஜக செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தி.மு.க. கட்சிக்கு பொது மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க பொள்ளாச்சியில் கனிமொழி அவர்கள் போராட்டம் நடத்தி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

1973ஆம் ஆண்டு கோபாலபுரத்திற்கு அருகேயுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் தடைப்பட்ட அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி ஸ்டாலினுக்கு நன்றாகத் தெரியும். மக்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் முதலமைச்சர் என்ற முறையில் மேலோட்டமாக கண்ணியமான முறையில் சொல்கிறேன். என்ன நடந்திருக்கும் என்பது பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதே போன்று, அண்ணா நகர் ரமேஷ் என்பவரும் ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரும் மர்மமான முறையில் இறந்து விட்டார் என்று சொல்லி வழக்கை முடித்து விடுகிறார்கள். அது குறித்த புகாரும் அரசுக்கு வரப்பெற்றால் அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதிக் பாட்சா பெரம்பலூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர். ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை சாதிக்பாட்சா கம்பெனியில் முதலீடு செய்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணை நடந்தபோது சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்றைய தி.மு.க அரசால் அந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

ஆனால், அது கொலைதான் என்று அவரது குடும்பம் கூறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாதிக் பாட்சாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது குடும்பத்தினர் “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் சாதிக்பாட்சா மனைவி ரேணுகாபானு மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சாதிக் பாட்சாவின் மனைவி அரசிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை கே.கே.நகர் பகுதி மகளிர் அணி செயலாளராக இருந்தவர் பால்மலர். கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர் வீடு திரும்பவில்லை. அதன்பின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டைக்குள் மணிமங்கலம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தார்.

இந்த கொலைச்சம்பவத்தில் திமுக பிரமுகர்கள் கவுன்சிலர் தனசேகரன், அன்பகம் கலை ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பான பேச்சுகள் எழுந்த நிலையில் திமுக ஆட்சியில் கொலைக்கான காரணம், கொலையாளி குறித்த எந்த விபரமும் கிடைக்கவில்லை. இதை நான் தொடர்புபடுத்தி பேசவில்லை. பத்திரிகையில் வந்த செய்தியை தெரிவிக்கிறேன். எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோரும் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக் காலத்தில் மர்மமான முறையில் இறந்தவர்கள் குறித்து ஒருமுறை கூட வாய் திறக்காதது ஏன்?

பழனியை திருப்பதி போன்று சிறப்பாக மேம்படுத்திட பழனிக்கு வரும் முக்கிய சாலைகளை அகலப்படுத்தி சீர் செய்திட ரூ.58 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பழனியில் உள்ள வையாபுரி திருநாயக்கர் குளம் கழிவு நீரால் அசுத்தப்பட்டுள்ளதையடுத்து ரூ.55 கோடி மதிப்பீட்டில் சுத்தம் செய்யப்படும். கொடைக்கானலில் பூண்டு பதப்படுத்தும் நிலையம், கேரட் சுத்தப்படுத்தும் நிலையம் ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

பழனியில் காய்கறி பதப்படுத்தும் நிலையம் கட்டப்பட்டுள்ளது. பழனி தாராபுரம் சாலையில் இடையேயுள்ள கடவு எண்.63 க்குப் பதலாக இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். உள்ளாட்சித்துறையில் ரூ.184 கோடி மதிப்பில் 6,500 பணிகள் நடைபெற்றுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.275 கோடி மதிப்பில் 120 சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.

பொள்ளாச்சி – திண்டுக்கல் 6 வழிச்சாலை அமைக்க ரூ.3600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி – கோயம்புத்தூர் 4 வழி சாலை அமைக்க ரூ.640 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பொள்ளாச்சி – பாலக்காடு சாலை வடுகம்பாளையத்தில் இரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி – கோயம்புத்தூர் மாற்றுச் சாலை அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.75 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி – பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ரூ.174 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 80 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் சாலைகளை சீர் செய்ய ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கு நகராட்சிக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு கட்டிடப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மடத்துக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் தூர் வாரப்பட்டதின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் கிடைக்கப்பெற்றுள்ளது.

அமராவதி கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேக்ளா ரெட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த தேர்தல் முடிந்தவுடன் அனுமதியளிக்கப்படும்.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்ணியத்துடன் நாகரிகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். பாரதப் பிரதமரைப் பற்றியும், முதலமைச்சரைப் பற்றியும், கூட்டணிக் கட்சி தலைவர்களை பற்றியும் அநாகரீகமான முறையில் தொடர்ந்து பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசுவாரேயானால் அவருக்கு எங்கள் கட்சியுடைய தொண்டர்களே பதில் அளிப்பார்கள்.

எனவே, இப்பகுதி வாக்காள பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.