சிறப்பு செய்திகள்

ஸ்டாலினின் வித்தை நம்மிடம் பலிக்காது – துணை முதலமைச்சர் சாட்டையடி…

கோவை:-

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். ஸ்டாலினின் வித்தை நம்மிடம் பலிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கோவை, ராமநாதபுரம் ஒலிம்பஸ் பஸ் நிலையம் அருகில் கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.

பிரச்சாரத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- 

நம்முடைய கோவை நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மத்திய-மாநில அரசின் பல்நோக்கு திட்டங்கள், நல்லநல்ல திட்டங்கள், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து, நல்ல முறையில் செயல்படுவார் என்பதை இந்த நல்ல நேரத்தில் உங்களுக்கு தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த காலத்தில், நிகழ்காலத்தில், கடந்த காலத்தில் திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்திருக்கிறது. தமிழகத்தில் மாண்புமிகு இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியும் நடந்துள்ளது, தற்போது அம்மாவின் ஆட்சி நடைபெற்று கொண்டுவருகிறது. இதில் யார் ஆட்சிக் காலத்தில் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தது.

யார் ஆட்சியில் கவலைப்படாமல் தமிழகத்திற்கு ஜீவாதார பிரச்சினைகளுக்கு ஊறு வரும் போது அதைக்காப்பாற்ற ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் அதை செய்ய தவறினார்கள், செவிடன் காதில் சங்கு ஊதியவர்கள் போல் இருந்தார்கள். யார் ஆட்சியில் நல்ல திட்டங்களையும், சமூக பாதுகாப்போடு நிறைவான திட்டங்களையும், நல்லாட்சி வழங்கினார்கள் என்று கோவை மாவட்ட மக்கள் எடைபோட்டு பார்க்க வேண்டும்.

கோவை மக்களாகிய நீங்கள் தேனீ போல் சுறுசுறுப்பானவர்கள், உழைப்பாளிகள், கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது, தொழில் வளமிக்க கோயம்புத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள திருப்பூர், பல்லடம், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மின்சார தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.

ஐந்து ஆண்டுகளாக மின்சாரம் தட்டுப்பாட்டை தீர்க்கவே முடியவில்லை, அப்போது திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீரசாமி, அப்போதே திமுக ஆட்சி தோற்றதால் மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்யாததே காரணமாக இருக்கும் என்று அன்றே கணித்துள்ளார். அவருக்கு அது தெரிந்துள்ளது.

காட்டு-தர்பார் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கொலை கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை, மற்றவர்களுக்கு உரிமையான நிலத்தை அபகரித்து அராஜகம் செய்து ஆட்சி செய்து வந்தனர். நமக்கும், கர்நாடகத்திற்கும் காலம்காலமாக இருந்து வந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்வு காணும் வகையில் 2007ஆம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது அம்மா அவர்கள் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, மு.கருணாநிதியிடம் காவேரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு அரசாணை பெறவேண்டுமென்றும், அப்போதுதான் தண்ணீர் வரும் என்றும் அம்மா வலியுறுத்தினார்.ஆனால் மத்தியில், காங்கிரஸ்-திமுக உடனான கூட்டணி ஆட்சி 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை இருந்தபோது தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. ஆனால் தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை, காவேரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மீண்டும் அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினையை தீர்க்க 2012 ஆம் ஆண்டு, பலமுறை டெல்லி சென்று, அன்றைய திமுக கூட்டணி ஆட்சியில் பாரத பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம், காவேரி நதிநீர் நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் (கெசட்) வெளியிடுவதற்கு பலமுறை வேண்டுகோளை விடுத்தார்கள். அதுவும் பயனில்லாமல் போனது.பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி சட்டப்போராட்டம் நடத்தி அம்மா அவர்கள் 2013-ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர் அம்மா அவர்கள் தான். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக அதை செய்யவே இல்லை.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்ததற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா அவர்களுக்கு தஞ்சை மண்டல விவசாயிகளின் சார்பாக நன்றிதெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.அப்போது அம்மா அவர்கள் தனது 33 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்வில்தான் மகிழ்ச்சியடைந்த நாளாக, காவேரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் தான் என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள் என்பதை இவ்விடத்தில் தங்களுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் 2011ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று என்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார்கள்,

தொலைநோக்கு திட்டமாக 2023-ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். அத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர்வதற்கும், வாழ்வில் அடித்தளத்தில் உள்ள மக்கள் மேல்தட்டில் உள்ள மக்களுக்கு இணையாக தன்னுடைய வாழ்க்கை நடைமுறையினை சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிதான் அம்மா அவர்கள் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

தமிழகத்தில் ஏழை, எளிய குடிசை வாழும் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2021க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25,000, பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50,000 , தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார்கள். மீண்டும் தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் அம்மாவின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பேறுகால நிதிஉதவி ரூ.6000 இருந்தது 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18,000 மாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.

மாணவ செல்வங்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்வி துறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், மாணவ செல்வங்களுக்கு இலவச பாடப்புத்தகம், இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கினார்கள். இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று சொல்வதற்கு இங்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

சிறுபான்மையினர் மக்கள் புனித யாத்திரை மெக்காவிற்கும், ஜெருசேலம் செல்வதற்கும், நோன்பு கஞ்சி தயாரிப்பது போன்றவற்றிற்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைத்து சமுகத்திற்கும் பாதுகாப்பு அரணாகவும், அனைத்து தரப்பு மக்களும் ஒரு தாய் மக்களாக பார்த்த, நமது புரட்சி தலைவி அம்மா அவர்கள்.

இந்தியாவிலேயே சாதி, சமயம் பேதமில்லாமல், சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஆட்சி செய்த ஒரே தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தான் தமிழகத்தை அமைதிப் பூங்கவாக மாற்றியுள்ளது. அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாங்கள் தொடர்ந்து மேலும் அதிகமாக திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும் எங்கள் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்தோம். அப்போது நான் முதலமைச்சராக இருந்த போது பாரத பிரதமர் நரேந்திரமோடியிடம் முறையிட்டு அது சம்மந்தமாக பிரதமர் அவர்கள் 5 துறைகளிடம் ஒரே நாளில் ஆலோசனை செய்து தடையின்மை சான்று மற்றும் அனுமதி பெற்று தந்தது பாரத பிரதமர் நரேந்திரமோடி தான் என்பதை தங்களுக்கு நினைவுக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

மக்கள் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பார்கள் அதை நான் அவ்வாறு என்னை அழைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளேன். எய்மஸ் மருத்துவமனை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
2006-2011 திமுக ஆட்சியில் அன்றை நேரத்தில் மு.கருணாநிதியிடம் அன்றைய நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 ஆண்டுகள் ஆதரவு தருவோம் என்றும், ராஜ்சபா எம்.பி தர வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டார்கள்.

ஆனால் ஒரு ராஜ்சபா எம்.பிக்கோட கம்யூனிஸ்ட் கட்சிக்கு தரவில்லை. ஆனால் 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்தபோது 8 தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். மேலும் அப்போது ராஜ்யசபா தேர்தல் வந்த போது கம்யூனிஸ்ட் கட்சி 1 ராஜ்ய சபா எம்.பி அம்மா அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. வேறு எந்த கட்சியிலும் இதுபோன்று நடைபெறாது.

அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் 1972-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு அம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆலம் விழுதுகளாக ஊன்றி ஆல மரமாக எந்த சுனாமி வந்தாலும் அசையாது, புயல் வந்தாலும் அசையாது, பூகம்பம் வந்தாலும் அசையாது, எந்த கொப்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது.

எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தமிழ்நாட்டினை தீ வைத்து கொளுத்தியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தினை எரித்து தீவைத்து கொளுத்தி மூன்று நபர்களை உயிரிழந்தார்கள், அக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள்,

வன்முறை கட்டவிழ்த்துவிடுவதில் திறமையான ஒரே கட்சி திமுக தான். பிரியாணி கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க வேண்டாமா? காசு கேட்டால் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பல்வேறு குற்றசாட்டுகளுடன், காட்டு-தர்பார் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்,

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் யாரோ ஒருவர் பேச்சை கேட்டுக் கொண்டு கலர்-கலராக மஞ்சள், பச்சை, சிவப்பு என சட்டை அணிந்து கொண்டு, நமக்கு நாமே திட்டம் என சொல்லிக்கொண்டு எப்படியாவது முதலமைச்சராகிவிடலாம் என கனவு கண்டுக்கொண்டு சைக்கிளில் வருகிறார், டிராக்டரில் வருகிறார், கரும்பு தோட்டத்தில் பூந்து வருகிறார், ஆட்டோவில் வருகிறார், டீக்கடையில் டீ குடிக்கிறார், இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு, பொய் பிரச்சராத்தை பரப்பிக் கொண்டு வித்தை காட்டி வருகிறார், இந்த வித்தை நம்மிடம் பலிக்காது, மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.

ஆனால் அம்மாவின் வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சி தற்போது தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றியுள்ளது. சென்ற மாதம், அம்மாவின் வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரத்தில் 252 கோடி செலவில் பிரமண்டமான பாலம் திறந்து வைத்தார் என்பதை மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் ஏழை கூலி தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ரூ2,000 வழங்கி கொண்டிருந்தோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக கட்சிக்காரர்கள் உயர்நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றார்கள்.
நாங்கள் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நிச்சயமாக வழங்குவோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று கோவை நாடாளுமன்ற வாக்காளர்களாகிய நீங்கள் எடைப்போட்டு பார்க்கும் எஜமானர்களாக செயல்பட்டு நமது கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை தாமரை சின்னத்தில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறு உங்களது பொற்பாதம் வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளும் நமதே, நாற்பதும் நமதே!

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.