தற்போதைய செய்திகள்

ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை- டாக்டர் ராமதாஸ் வேதனை…

வேலூர்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் கூட தெரியவில்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் டாக்டர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சிறுபான்மை மக்கள் தங்கள் தாய்மொழியான உருது மொழியில் கல்வி கற்க வேண்டும் எனற கோரிக்கை வைத்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் அதுதான். தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் கழக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

சிறுபான்மை, பெரும்பான்மை என்பதை விட நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக, சகோதரர்களாக, அண்ணன், தம்பியாக,காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் எந்தவித பேதமும் இல்லை. எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற கட்சிதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பேரியக்கம்.

சில தீய சக்திகள் மக்களை பிரிக்க நினைக்கின்றன. அதற்கு இடம் அளிக்கக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி தந்தோம் என்று திமுகவினர் கூறுவார்கள். ஆனால் அதற்காக போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சிதான். சிறுபான்மை மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரச்சினையை தேர்தலுக்கு பின்பு தீர்த்து வைக்கப்படும்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரையும், என்னை பற்றியும் தவறாக பேசி வருகிறார். அவருக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

அவரது வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்தும், தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் ஏழு பேரும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஜெ.ஜோதிராமலிங்க ராஜா, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி ஆகியோர் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சிறந்த, திறமை வாய்ந்த வேட்பாளர்கள். சொல்வதை செய்யக்கூடிய சிறந்த பண்பாளர்கள். ஆகவே அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.