சிறப்பு செய்திகள்

ஸ்டாலினுக்கு ஊழலை பற்றி பேச அருகதை இல்லை – முதலமைச்சர் கடும் தாக்கு…

2 ஜி ஊழலில் திகார் சிறைக்கு சென்றவர்களை தி.மு.க. வேட்பாளர்களாக நிறுத்தி விட்டு ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்குஎந்த அருகதையும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடினார். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்றும், அவர்களுக்கு உரிய மானியம் தொடரும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். 

நீலகிரி:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்  நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. எம். தியாகராஜனை ஆதரித்து உதகை, குன்னூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

மத்தியில் நிலையான சிறப்பான ஆட்சியைத் தேர்ந்தெடுக்கவும் வலுமையான பிரதமரை தேர்ந்தெடுக்கவும் நடக்கக் கூடிய தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல். அந்த வகையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டி மோடியை பிரதமராக்க தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எம்.தியாகராஜன் போட்டியிடுகிறார். அவர் மிகவும் எளிமையானவர். பண்பானவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். ஆனால் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் ஊழல் பற்றி பேசி வருகிறார். இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா அவர் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்ததாக திகார் சிறை சென்றவர். வழக்கு முடிந்ததாக தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். உண்மை என்னவெனில் குறிப்பிட்ட காலத்திற்குள் தகுந்த ஆதாரங்கள் சமர்பிக்காததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வுத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. நிச்சயம் அவர்களுக்குரியது கண்டிப்பாக கிடைக்கும். அது என்னவென்று உங்களுக்கே தெரியும்.

மத்தியில் காங்கிரஸ் மந்திரி சபையில் திமுகவும் பங்கு வகித்தது. அந்த மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர்தான் ஆ.ராசா இவர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் செய்துள்ளார். தவறு செய்துள்ளார் என வெளிவந்த தகவலின் அடிப்படையில்தான் அவர் மீது அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு எதிர்கட்சியாக இருந்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல் என்று சொல்லலாம். இவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது அதே மந்திரி சபையில் அங்கம் வகிக்கிறார். இதிலிருந்தே நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இப்படி சிறை சென்றவருக்கு சீட் கொடுத்துவிட்டு ஊழல் பற்றி ஏளனம் பேசி வரும் ஸ்டாலின் அவர்களை என்னவென்று சொல்வது.

கழக வேட்பாளர் எம்.தியாகராஜன் 1998-ம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றிய போது என்னுடன் பணியாற்றியவர். நன்றாக உழைக்கக்கூடியவர். அம்மா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தன் சொந்த மாவட்டமாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அதேபோன்று இம்மாவட்ட மக்களுடன் நன்கு பழகக் கூடியவர். அம்மா வழியில் செயல்படும் இந்த அரசும் அம்மாவின் எண்ணங்களை தொடர்ந்து நிறைவேற்றும்.

அம்மா மறைவிற்குப் பிறகு நானும் இந்த மாவட்டத்தை எனது சொந்த மாவட்டமாக பாவித்து முன்னுரிமை அடிப்படையில் மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாடு அடைய தொடர்ந்து பாடுபடுவேன். நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் சுற்றுலாவிற்காக நீலகிரிக்கு வருகை தருகின்றனர். அதன் காரணமாக அம்மா அவர்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலகிரி சுற்றுலாத் தலத்தினை மேம்படுத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அம்மா வழியில் செயல்படும் இந்த அரசும் அதனை இன்னும் மெருகேற்றும் வகையிலும் உங்களது பொருளாதாரம் மேம்பாடு அடையவும் தொடர்ந்து பாடுபடும்.

2009-ம் ஆண்டு இங்கு நிலச்சரிவு ஏற்பட்ட போது அப்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராசா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இப்படி பாதிப்பு ஏற்படும் காலத்தில் மக்களை சந்தித்து சரியான நிவாரண உதவி செய்யாத நபருக்கா உங்களது ஓட்டு. அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மக்களை மறந்தால் மக்கள் அவரை மறக்க வேண்டும். நிலச்சரிவு தொடர்பாக என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் 24,000 பேருக்கு தேயிலை விலை வீழ்ச்சி காலக் கட்டத்தில் ரூ. 2 வீதம் வருடம் 12 கோடி மானியம் வழங்கப்பட்டது. இவ்வாறு தேயிலை வீழ்ச்சிக் காலத்தில் அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்கும். ஈழவாதியா இனத்தைச் சேர்ந்த மக்கள் பி.சி. பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அரசு பரிசீலிக்கும். பிரிவு 17 நிலத்தில் குடியிருப்பவர்களை வெளியேற்றம் செய்யப்படும் எனும் தவறான பிராச்சாரத்தை யாரும் நம்ப வேண்டாம். அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத்தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குன்னூர் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்திட ரூ.95கோடி மதிப்பில் எமரால்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவுற்ற பிறகு அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள லெவல் கிராஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் பார்க்கிங் வசதிக்காக இடம் தேர்வு செய்யப்படும். குன்னூர் நகராட்சி கடை வாடகை வரன்முறைப் படுத்தப்படும். நீலகிரியின் சுற்றுச் சூழல் இயற்கைச் சூழலை காக்க கொண்டு வரப்பட்ட மாஸ்டர் பிளான் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இப்பகுதி வாக்காள பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்து, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எம். தியாகராஜனுக்கு இரட்டை இலை சின்னத்தில், வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.