தற்போதைய செய்திகள்

ஸ்டாலினுக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

ஸ்டாலினுக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்டத்தில் அமமுக முக்கிய நிர்வாகியான எம்.எஸ் சுப்பு தலைமையில் 100 பேர் அக்கட்சியிலிருந்து விலகி மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. முதலமைச்சரின் நிர்வாகத் திறமையால் தமிழகம் முதலிடத்தை பெற்றது மட்டுமல்லாது இந்தியாவிலேயே 47 சதவீதம் அந்நிய முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் சீர்கெட்டு தான் இருந்தது. ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். ஏதாவது திட்டப் பணியை செய்தாரா? திமுக ஆட்சிக் காலத்தில் தான் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், வீராணம் திட்ட ஊழல், நில அபகரிப்பு இப்படி பஞ்ச பூதங்களிலும் ஊழல் நடைபெற்றது.

ஊழலால் தமிழகத்திற்கு அவமானத்தை தந்தது திமுக. ஆனால் நிர்வாகத் திறமையால் சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து தமிழினத்திற்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தவர் நமது முதலமைச்சர் ஆவார். சட்டமன்றத்தில் கூட ஸ்டாலினுக்கு சரியாக கேள்வி கேட்க தெரியாது. அவர் வெளியே புலி போல் காட்டிக்கொண்டு சட்டமன்றத்தில் பூனை போல உட்கார்ந்திருப்பார்.

ஸ்டாலினுக்கு எந்த திறமையும் இல்லை. ஆனால் பொய் பிரச்சாரத்தை மூலதனம் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறார். தண்ணீரும், எண்ணெய்யும் ஒட்டாது. அதுபோல் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடத்தில் ஒட்ட முடியா.து ஸ்டாலினுக்கு பொய் பிரச்சாரத்தை தவிர வேறு எதுவுமே தெரியாது. விரைவில் வரவுள்ள மாநகராட்சி தேர்தலில் கழக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட கழக துணைச் செயலாளர் தங்கம் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.