காஞ்சிபுரம்

ஸ்டாலின் கனவு கனவாகவே முடியும் – வாலாஜாபாத் பா.கணேசன் பேச்சு

காஞ்சிபுரம்

ஸ்டாலின் கனவு கனவாகவே முடியும் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கூறினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் ராஜகுளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ் தலைமை வகிதர்தார். கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் பேசியதாவது:-

ஏழை, எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கடையேழு வள்ளல்களுக்கு பிறகு எட்டாவது வள்ளலாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தின் மூலம் படித்தவர்கள் மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்கறிஞராகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் வந்திருக்கிறார்கள்.

அப்படி உயர் பதவிக்கு வந்த எண்ணற்றோர் “நாங்கள் அரசு பள்ளியில் புரட்சித்தலைவர் கொண்டுவந்த சத்துணவினை சாப்பிட்டு இன்றைக்கு உயர் பதவிக்கு வந்துள்ளோம்” என்று நன்றியோடு கழக அரசை பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலே எந்த அரசுக்காவது இத்தகைய பெருமை கிடைக்குமா? ஆனால் நமது கழக அரசுக்கு மட்டுமே இத்தகைய புகழ் கிடைக்கிறது.

இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி உதவி மற்றும் மாணவ மாணவிகளுக்கு மடிகணினி உள்பட பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் இந்தியாவிலேயே இன்னும் சொல்லபோனால் உலகத்திலே எந்த அரசும் கொண்டு வராத புரட்சிகரமான திட்டங்களாகும். அதனால் தான் அவர்களை அன்றே நாம் புரட்சித்தலைவர் என்றும் புரட்சித்தலைவி அம்மா என்றும் அன்போடும் பாசத்தோடும் அழைத்தோம். கழக அரசின் சாதனைகளை கண்டு ஸ்டாலின் கதிகலங்கி உள்ளார். அவரின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது. அவரது கனவு கனவாகவே முடியும். இனியும் அவர் தொடர்ந்து கனவு கண்டால் அது கானல் நீராகும்.

ஏழை எளியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக கழக அரசு விளங்குவதால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான முதல் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு என்றென்றும் நாம் துணை நிற்போம்.

இவ்வாறு வாலாஜாபாத் பா.கணேசன் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றியக் கழகச் செயலாளர் அக்ரி நாகராஜன், மாவட்ட அணி நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், தென்னேரி என்.எம்.வரதராஜிலு, வி.ஆர்.மணிவண்ணன் உட்பட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.