தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் கூறியது போல் ஏட்டு சுரக்காய் அல்ல, அனைவருக்கும் பலன் தரும் நாட்டு சுரக்காய் – பட்ஜெட் குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து…

சென்னை

பட்ஜெட் ஸ்டாலின் கூறியது போல் ஏட்டு சுரக்காய் அல்ல. அனைவருக்கும் பலன் தரும் நாட்டு சுரக்காய் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- 

அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நிறைவான பட்ஜெட்டை முதல்வரின் ஒப்புதலோடு துணை முதல்வர் தாக்கல் செய்துள்ளார். ஸ்டாலின் பட்ஜெட் குறித்து சங்கீத வித்வான் வாசித்துள்ளார் என்று கூறியுள்ளார். சங்கீத வித்வானை இப்படி கேவலப்படுத்தக்கூடாது. சங்கீத வித்வான் என்றால் கேவலமா? உண்மையிலேயே அவர்கள் ஞானம் பெற்றவர்கள். ஏழு சுரம் குறித்து தெரியாதவர்கள் சங்கீதத்தை பற்றி பேசுவது வியப்பாக உள்ளது.

சங்கீத வித்வான் நல்ல இசையை அளித்தது போல நல்ல பட்ஜெட்டை துணை முதல்வர் தாக்கல் செய்துள்ளார். எனவே சங்கீத வித்வான் என்று துணை முதல்வரை குறிப்பிட்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏட்டு சுரைக்காய் என்று கூறுகிறார். இது ஏட்டு சுரைக்காய் இல்லை. அனைவருக்கும் பலன் தரக்கூடிய நாட்டு சுரக்காய். பழம் நழுவி பாலில் விழுந்தது போல இனிப்பான பட்ஜெட் இது. மீனவளத்துறைக்கு ரூ.965 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அம்மா முதல்வராக இருந்த போது ரூ.100 கோடி நிதி ஒதுக்கினார். அந்த பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. தற்போது முதல்வர் அறிவித்த அத்தனை திட்டங்களுக்கும் முறையாக அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.