சிறப்பு செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்…

தூத்துக்குடி:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் என்று தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனனை ஆதரித்து,  பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற சங்கரப்பேரி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாடுவளம் பெற, செழிக்க, திறமையான, உறுதியான, வலிமையான தலைமை வேண்டும். அந்த தலைமை பொறுப்புக்கு தகுதி வாய்ந்தவர் பாரத பிரதமர் நரேந்திரமோடி. நமது கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் விமர்சனம் செய்கிறார். இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவித்து வருவதை காணமுடிகிறது.

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது அ.இ.அ.தி.மு.க. 37 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 1 இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி 1 இடத்திலும் வெற்றிபெற்று 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் வருவதற்கு சில துரோகிகள் செய்த சதிதான் காரணம். துரோகம் செய்த சதிகாரர்களையும், துரோகிகளையும் வீழ்த்த இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் முழுமூச்சுடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தைத் திருநாளாம் தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1000 வழங்கக் கூடாது என தி.மு.க. கெட்ட எண்ணத்துடன் நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1000 வழங்க தடையில்லை என அறிவித்ததன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன்.

ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கின்ற திட்டங்களை தடுத்தும் நிறுத்தும் ஒரு கட்சி இந்தியாவில் உண்டென்றால், அது தி.மு.க. மட்டும் தான்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் குடிமராமத்து என்ற திட்டம் துவங்கப்பட்டு, சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மழை காலங்களில் பெய்கின்ற நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்திடும் நோக்கத்தோடு, தடுப்பணைகள் கட்டும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு 304 தொழில் நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். இளைஞர்களுக்கு வேலை அளிப்பதை அடிப்படையாகக் கொண்டு தான் புதிய, புதிய தொழில் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை வைத்து, தி.மு.க. வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து விளக்கத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது எனது கடமை எனக் கருதுகிறேன். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்வதற்கு 243 ஏக்கர் நிலம் கொடுத்தது தி.மு.க. தான். அந்த காலகட்டத்தில் தொழில் துறை அமைச்சராக இருந்தவரும் ஸ்டாலின் தான். 03.05.2010அன்று சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசும் போது, ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.1500 கோடி மதிப்பில் அதன் விரிவாக்கத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது என பதிலளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அனைத்திற்கும் அனுமதி அளித்து விட்டு அந்த ஆலை செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்து விட்டு, அ.இ.அ.தி.மு.க. அரசின் மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக அப்போதைய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தபோதிலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று 28.09.2010ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்பொழுதே ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பொதுமக்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்கலாம்.

தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் 01.10.2010அன்று உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. 01.10.2010அன்றே உயர்நீதிமன்றத்தின் மூடுதல் ஆணையை நிறுத்தி வைத்து, ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிலைமை இவ்வாறு இருக்க தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி வந்தாலும். இங்குள்ள மக்கள் இதனை நம்பமாட்டார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை இப்பகுதி மக்கள் நன்கு தெரிந்திருப்பார்கள். எக்காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி தி.மு.க. வேட்பாளராக இங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்கு, தகுதியான வேட்பாளராக கருதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 பணிகள் ரூ.1075 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு. 18 பணிகள் ரூ.435 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ளது. இதரப்பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ.322 கோடி இழப்பீடாக பெறப்பட்டு 1,33,729 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மதுரை – தூத்துக்குடி சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலை – தூத்துக்குடி – திருச்செந்தூர் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

கயத்தாறு கிராமத்தில் ரூ.2கோடி செலவில் கட்டபொம்மன் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தருவை குளத்தில் ரூ.16.25கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணத்தில் டாக்டர்.ப.சிவந்திஆதித்தனார் அவர்களுக்கு ரூ.1.25 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்க என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி – கருமேனி – நம்பியாறு இணைப்புத்திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் தூத்துக்குடி மாவட்டம் எம்.எல். தேரி வரை கால்வாய் மூலம் நீர் கொண்டுவரப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

29.01.2018 அன்று உடன்குடி மிக உய்ய அனல் மின்நிலையம் நிலை 1-ற்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் தலா 660 மெகாவாட் திறனுடைய 2 அலகு கொண்ட இத்திட்டம். 2020-2021-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, தூத்துக்குடி நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பன்க்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.