திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம் – முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்…

திருச்சி

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு விரிவான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தெரிவித்தார்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் ஏகாதசி பெருவிழா நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தெரிவித்ததாவது:-

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று 7.12.2018 தொடங்கியது. வரும் 28.12.2018 வரை இத்திருவிழா நடைபெற உள்ளது. இதன் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு 18.12.2018 அன்று அதிகாலை நடைபெற உள்ளது. இத்திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இக்கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. இவ்விழா கடந்த ஆண்டுகளைப் போன்று மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்கப்படும். திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்படும். முக்கிய திருவிழா நாட்களான 17.12.2018 முதல் 19.12.2018 முடிய நாள் முழுவதும் குடிநீர் குழாய்களில் தண்ணீர்விட ஏற்பாடு செய்யப்படும். மேலும் தற்காலிக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்படும்.

அம்மா மண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் பொதுமக்கள் இரவு, பகல் எந்நேரமும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்படும். மின்வாரியத்தின் சார்பில் சீரான முறையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். இதுதவிர, ஸ்ரீரங்கம் கோயிலில் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்படும்.

விழாவின் முக்கிய நாட்களான 17.12.2018 முதல் 19.12.2018 வரை கோயிலில் சிறப்பு ரயில் இயக்கவும், அனைத்து விரைவு ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், கூடுதலான இடஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து துறை சார்பில் முக்கிய திருநாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க தக்க ஏற்பாடு செய்யப்படும். அவசர தேவைக்கு கூடுதல் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

தீயணைப்புத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கையாக ஆலயத்தினுள் தகரப்பந்தல் மற்றும் தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி வைக்கப்படும். மேலும் இத்துறையின் மூலம் கூடுதல் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். வருகின்ற 17.12.2018 முதல் 19.12.2018 வரை பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேரமும் மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

மேலும், தவறுகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்திடவும், போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்திடவும், நெரிசலை கட்டுப்படுத்திடவும் காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். காவல் துறையினர் அறிவிக்கும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுசெய்து தரமான உணவு வகைகள் வழங்க வேண்டும்.

உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதையும், கூடுதல் விலையில் விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டும், விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள் ஆகியவற்றில் ரசாயன கலவை கலக்கப்பட்டுள்ளதா என கண்டறியும் பொருட்டும், குழுவாக பணியாளர்களை அமைத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், ஸ்ரீரங்கம் சார்ஆட்சியர் சிபிஆதித்ய செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.