திருச்சி

ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

திருச்சி

ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் என்கின்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீஅரங்கநாதரை தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் என்கின்ற சொர்க்கவாசல் திறப்பு  அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி, அதிகாலை 4.15 மணிக்கு ரத்தினங்கியுடன் கருவறையிலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், விரஜாநதி மண்டபம் வழியாக காலை 5.30 மணியளவில் பரமபதவாசல் என்கின்ற சொர்க்கவாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவினையொட்டி, காலை 8.45 மணி முதல் இரவு 10 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீஅரங்கநாதரை தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் விழாவிற்கு முன்னதாக பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் ஏகாதசி பெருவிழா நடைபெறும்.
இவ்விழா இந்த ஆண்டு கடந்த (டிசம்பர்) 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி (சனிக்கிழமை) பகல் பத்து திருநாள் தொடங்கியது.

இவ்விழாவினைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் மோகினி அலங்காரம் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி விழா என்று அழைக்கப்படுகின்ற பரமபதவாசல் என்கின்ற சொர்க்கவாசல் திறப்பு விழா அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இவ்விழாவினைத் தொடர்ந்து வரும் 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 27-ந் தேதி தீர்த்தவாரி, 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியன நடைபெற உள்ளன. பகல்பத்து திருவிழா நாட்களில் உற்சவரான ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ச்சனை மண்டபத்திற்கு சென்று நாள் முழுவதும் அங்கிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

அதாவது நாள்தோறும் காலை 7 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பகல்பத்து அர்ஜுனா மண்டபம் சென்று, காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர் சேவையைத்தொடர்ந்து, 1 மணி முதல் 2 மணிவரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்பட்டது. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை திருப்பாவாடை கோஷ்டி, மாலை 3 முதல் 4 மணிவரை வெள்ளிச்சம்பா அமுது, மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை உபயக்காரர்களுக்கு மரியாதை. மாலை 5.30 முதல் 6.30 வரை மூலஸ்தான புறப்பாட்டுக்காக திரையிடப்பட்டது. மாலை 6.30 மணிக்கு அர்ஜீனா மண்டபத்திலிருந்து புறப்பாடும், இரவு 9.45 மணிக்கு அரங்கநாதர் மூலஸ்தானம் சென்றடைந்தார். இதேபோல் நாள்தோறும் மூலவர் முத்தங்கி சேவை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் பத்தாம் திருநாளில் மோகினி அலங்காரம் நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீநம்பெருமாள் காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் புறப்பட்டு, காலை 7 மணிக்கு பகல்பத்து அர்ஜூனா மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 7.30 மணிமுதல் பகல் 11 மணிவரை அரையர் சேவை நடைபெற்றது.

பின்னர் பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை அரையர் இரண்டாம் சேவை ராவணவதமும், மாலை 3 மணி முதல் 4 மணி வரை பொது ஜன சேவையுடன் உபயக்காரர் மரியாதை செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு பகல் பத்து அர்ஜூனா மண்டபத்திலிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியப்படால் வாசல் சென்றடைந்தார். மாலை 7 மணிக்கு அரங்கநாதர் திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருடமண்டபம் சென்றடைந்தார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள், மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இத்திருக்கோயிலில் நடைபெறும் பகல்பத்து திருநாட்களின்போது திருமொழி பாசுரங்களும், இராபத்து திருநாட்களின்போது திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும். இத்திருக்கோயிலில் ராபத்து திருநாட்களின்போது அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுடன் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு மற்றும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான முறையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பகல் பத்து திருநாட்களில் நம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் அர்ச்சுனா மண்டபம் மற்றும் ராப்பத்து திருநாட்களில் சேவை சாதிக்கும் திருமாமணி மண்டபம் (ஆயிரங்கால் மண்டபம்) ஆகியவை தூய்மை படுத்தபட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன், அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், அறங்காவலர்கள் ஸ்ரீனிவாசன், கவிதாஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.