விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

விருதுநகர்:-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள நாச்சியார் (ஆண்டாள்) கோயிலில் ஆடிபூரத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆடிபூரத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தேரோட்ட விழா காலை 8.05 மணிக்கு தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர். தேர் கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற விண்ணதிர கோஷமிட்டனர்.

ஆடிப்பூர தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப் பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப் பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவில்லிபுத்தூர் எம்.சந்திரபிரபா, சாத்தூர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன், புகழேந்தி, பாரதிதாசன், கிருஷ்ணகுமார், ராஜமாணிக்கம், ஆதிகேசவலு, தாரணி, விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.முத்துசாரதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், இணை ஆணையர் ந.தனபால், அறங்காவலர் குழுத்தலைவர் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் அ.இளங்கோவன், ஆய்வாளர் து.பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.