தமிழகம்

10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை:-

தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை குறித்து இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையோ மிக கன மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூர் 13 செ.மீ, அரியலூர் 12 செ.மீ., திருவாரூர் 11 செ.மீ, விழுப்புரம் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.