தமிழகம்

10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை…

தமிழகத்தில் 10 வாக்குசாவடிகளுக்கு மறு வாக்குப் பதிவு நடத்த கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

வேலூர் தவிர்த்து தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. தேர்தலின்போது ஒருசில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கிளம்பியது. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறியிருந்தார்.

இந்நிலையில், முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாஹு பரிந்துரைத்துள்ளார். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகளுக்கும் திருவள்ளூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கும் கடலூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கும் மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.