தற்போதைய செய்திகள்

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் திருப்பூரில் அமைச்சர்கள் வழங்கினர்

திருப்பூர்

திருப்பூரில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2018-2019-ம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

இவ்விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- 

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டு புத்தகங்கள், விலையில்லா பேருந்து பயண அட்டைகள், விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் விலையில்லா மடிகணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கல்வித்துறைக்கென பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான அதிகப்படியான நிதியினையும் ஒதுக்கி தந்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வியக்கும் வகையில் தமிழகத்தில் புதிய கல்வி புரட்சியினை உருவாக்கி வருகிறோம். ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுகின்ற அரசாக அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் மற்றும் 12-ம் பொதுத்தேர்வில் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்காக கல்வித்துறை அமைச்சர் என்கின்ற முறையிலும் மற்றும் தமிழக அரசின் சார்பில் இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த கல்வியாளரை உருவாக்கும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். உங்களுக்கான சிறு, சிறு இடர்பாடுகளையும் அம்மா அவர்களின் அரசு முழுமையாக பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

விழாவில் திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 300 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய 2200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் என 2500 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், கரைப்புதூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேகர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரமேஷ், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் க.பழனிச்சாமி, ஆனந்தி, சிவக்குமார், கு.பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.