தமிழகம்

1000 மாற்றுத்தினாளிகளுக்கு மோட்டார் பொருத்திய நகரும் வண்டி – முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 22.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தசைச்சிதைவு அல்லது பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டில் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1000 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகளை வழங்கிடும் அடையாளமாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்குதல், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வீடுகள் ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வயது 18-ஆக குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தசைச்சிதைவு அல்லது பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும், இரண்டு கால்களும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக 2017-18ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2017-2018ம் நிதியாண்டில் 1000 பயனாளிகளுக்கு அவ்வாகனங்களை வழங்கிட 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 872 மாற்றுத்திறனாளிகள் மாநிலம் முழுவதும் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் மடக்கு வசதிகளுடன், நவீன தொழில்நுட்பத்துடன், அதிக திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டு, இலகுவானதாகவும், எளிதில் இயக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணம், சிறு அசைவைப் பயன்படுத்தி ஜாய்ஸ்டிக் எனப்படும் சிறிய சுவிட்சு மூலம் வண்டியை இயக்கும் அளவிற்கும், பயனாளிகள் வசதிக்கு ஏற்றவாறு சாய்ந்து கொள்ளும் நிலையை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வண்டிகளில் உள்ள பாட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 கிலோ மீட்டர் வரை செல்லும் அளவிற்கும், அதிகபட்சமாக 120 கிலோ எடை தாங்கும் அளவிற்கும், சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிய இடத்தில் எளிதாக வண்டியைத் திருப்ப உதவியாக இவ்வண்டிகளில் அதிக தரம் வாய்ந்த காஸ்டர் சக்கரம் (Castor Wheel ) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உயரமான பாதைகளில் செல்லும் போது, சக்கரங்கள் பின்னால் வராமல் இருக்கும் வகையில் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அளவிற்கு தரம் வாய்ந்த சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வண்டியிலும் பயனாளிகளுக்கு தேவையான பயன்பாட்டிற்கான கையேடு மற்றும் தற்காலிக பழுது பார்த்தலுக்கான அடிப்படை சரிசெய்யும் கருவிகள் (tool kit) ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ் குமார், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் பி.மகேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.