இந்தியா மற்றவை

13 பேருடன் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்…

புதுதில்லி:-

13 பேருடன் மாயமான இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இருந்து ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டுக்கான விமானம் ஒன்று நேற்று திங்கள்கிழமை நண்பகல் 12.25 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. அருணாசல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 8 விமானப் பணியாளர்களும், 5 பயணிகளும் இருந்தனர்.

அந்த இடத்தை அடைய சுமார் 50 நிமிடங்கள் ஆகும். ஆனால், அந்த விமானம் புறப்பட்ட 35 நிமிடத்திலேயே (சுமார் 1 மணியளவில்) ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அத்துடன், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பையும் இழந்தது.

மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30, சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விமானப் படை செய்தித் தொடர்பாளர் கோங்சாய் தெரிவித்தார்.

நேற்று முழுவதும் தேடியும் விமான எங்கு சென்றது என்பது தெரியாத நிலையில், இன்றும் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என கருதப்படும் பகுதி குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், அங்கு ஹெலிகாப்டர்கள் விரைந்திருப்பதாகவும் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் பணியில் எம்ஐ-17 ஹெலிகாப்டர்களுடன் சி130ஜே மற்றும் ஏஎன்-32 ரக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வான்வழி மட்டுமின்றி தரைவழி தேடுதல் பணிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாயமான ஏஎன்-32 ரக விமானம் ரஷ்யா தயாரிப்பிலான இரட்டை இன்ஜின் கொண்டது. கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படை சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று விபத்தில் சிக்கியுள்ளதும், அதில் இருந்தவர்களின் நிலை குறித்த தெரியாத நிலையில் விமானப்படையினர் மத்தியில் பெரும் சோகம் நிலவியுள்ளது.

2009 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் இதே ரக விமானம் ரின்ச்சி சிகரத்தில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 13 பேரும் உயிரிழந்தனர். 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி இதே ரக விமான சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்பிளேருக்கு 29 பேருடன் புறப்பட்டபோது வங்காள வரிகுடா கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது மாயமானது.

விமானப்படை விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் என சுமார் 2 லட்சம் கடல் சதுர மைல்கள் வரை 2 மாதங்கள் தேடியும் இதுவரை அந்த விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை. கடைசியாக தேடுதல் பணிகளை நிறுத்தவுதாக செப்டம்பர் 22 ஆம் தேதி விமானப்படை அறிவித்தது. அந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் நிலை இன்று வரை மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் 3-வது விமான விபத்தாக ஏஎன்-32 விமான 13 பேருடன் மாயமாகியுள்ளது.