தமிழகம்

160 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புக்கு தமிழகம் வருகை – தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்…

சென்னை

நாடாளுமன்றத்தேர்தல் பாதுகாப்புக்காக 160 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை தர இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்தார்.

தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாடாளுமன்றத்தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவம் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது. அதில் 160 கம்பெனி துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஒவ்வொரு கம்பெனியிலும் 90 வீரர்கள் அடங்கியிருப்பார்கள், ஏற்கனவே 10 கம்பெனி ராணுவ வீரர்கள் தமிழகம் வந்திருக்கிறார்கள். மற்ற கம்பெனிகளை சேர்ந்த ராணுவத்தினர் விரைவில் வந்தடைவார்கள். டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்ய வலியுறுத்திய தி.மு.க.வின் மனு மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது குறித்த இறுதிமுடிவை தேர்தல்கமிஷன் மேற்கொள்ளும், அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் அவர்களுக்கான இரண்டாவது கட்ட பயிற்சியின் போது வழங்கப்படும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வரும் 13ம்தேதி நடத்தப்படும், வருமானவரித்துறை நடத்திய சோதனையின் மூலம் 45.57 கோடி ரூபாய் பிடிப்பட்டுள்ளது. இதுவரை 94.10 கோடி பணமும், 520 கிலோ தங்கமும், 421 கிலோ வெள்ளியும் பிடிபட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ 131 கோடியாகும், இவை தவிர ரூ 25லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரத்து 198 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரும் 18ம்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். வாக்கு எண்ணிக்கை வரை நடத்தை விதிமுறைகள் நீடிக்கும். 18ம்தேதி பின்னர் சில நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படலாம். தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், யாருடையது என்பது குறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள், காவல்துறையினர், வருமானவரித் துறையினர், அந்நிய செலாவாணி அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். தமிழகத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற 3.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி மூலம் 1700 புகார்கள் வந்துள்ளன. அதில் 533 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 696 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.