தற்போதைய செய்திகள்

17 வயது சிறுவனின் நுரையீரலில் பால்ரஸ் குண்டுகள் அகற்றம் – சேலம் அரசு டாக்டர்கள் சாதனை…

சேலம்:-

ஏர்கன் துப்பாக்கி வெடித்து 17 வயது சிறுவனின் நுரையீரலில் பாய்ந்த பால்ரஸ் குண்டுகளை சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கி சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி பொன்னம்மாபேட்டை செங்கல் அணைப் பகுதியில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் கொண்டுவந்த ஏர்கன் வெடித்து 17 வயது சிறுவனின் உடலில் பால்ரஸ் குண்டு பாய்ந்தது. உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டான்.

கடந்த 18ஆம் தேதி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரலின் நடுப்பகுதியில் குண்டு சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சையில் இறங்கிய மருத்துவர்கள், சிறுவனின் வலது மார்பு வழியே துளையிட்டு குண்டை அகற்றினர்.

தற்போது சிறுவன் நன்றாகத் தேறி வருவதாகக் கூறும் மருத்துவர்கள், அனைத்துவிதமான உயர் சிகிச்சைக் இயந்திரங்களும் மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்ததால் சிறுவனை காப்பாற்ற முடிந்தது என்று கூறினர்.சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 11 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் உள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் திருமால்பாபு கூறினார்.

தமிழக அரசின் “தாய் திட்டம்” மூலம் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகக் கூறிய முதல்வர் திருமால்பாபு, தற்போது சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று கூறினார்.