சிறப்பு செய்திகள்

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : கழகத்தினர் போட்டி போட்டு விருப்ப மனு தாக்கல்…

சென்னை

நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு தலைமைக் கழகத்தில் கழகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனு கொடுத்தனர்.

ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் கழகத்தினர் குவிந்திருந்தனர். எங்கும் எழுச்சி உற்சாகம், வாழ்த்து கோஷங்கள் இருந்தது.தலைமை கழகத்தில் நீண்ட கியூவில் நின்று ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தி விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து அதனை வழங்கினார்கள்.

தமிழகத்தில் பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிபட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18-–ந்தேதி அன்று சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.

கோர்ட்டில் வழக்குகள் இருப்பதால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், த.மா.கா ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், த.மா.கா ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் என மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கழகம் வசம் 20 தொகுதிகள் உள்ளன.

த.மா.கா.

த.மா.கா.வுடன் கழகதலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி முடிவு செய்திருக்கிறார்கள். அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை கழகம் 18 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. 18 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை கூட்டணி கட்சிகள் ஆதரிக்கின்றன. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப் பட்டுள்ளது.

18 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை நிறுத்துவதால், அந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் சென்று 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு பெறலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்திருந்தார்கள். இன்றே மனுக்களை பூர்த்தி செய்து திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டதால் அந்த தொகுதிக்கு மீண்டும் விருப்ப மனு அளிக்க தேவை இல்லை என்று கூறியிருந்தனர்.

குவிந்தனர்

காலையிலேயே கழகத்தினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் குவிந்தனர். காலை 10 மணிக்கு விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டம் அதிகமாக இருந்ததால் 9.30 மணி அளவிலேயே விருப்ப மனு வழங்கப்பட்டது. மிகுந்த ஆர்வமாக வந்து கழகத்தினர் தலைமை கழகத்தில் குவிந்தனர்.

உற்சாகம், எழுச்சி

தலைமை கழகத்தில் உற்சாகம், எழுச்சி காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கழகத்தினர் திரண்டிருந்தனர்.25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவை பெற்றார்கள். அந்த விருப்ப மனுவை பக்கத்தில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் சென்று ஜெராக்ஸ் எடுத்து அதன் பின் விண்ணப்ப மனுவை பூர்த்தி செய்தனர்.

பூர்த்தி செய்த மனுவையும் பலர் ஜெராக்ஸ் எடுத்து கொண்டனர். எனவே ஜெராக்ஸ் கடையிலும் அதிக கூட்டம் காணப்பட்டது. தலைமைக் கழகத்தில் அதிக கூட்டம் இருந்ததால் அங்கு நாற்காலிகளிலும், தரையிலும் அமர்ந்து விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.