பெரம்பலூர்

1896 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் வழங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1896 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து, குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மேலமாத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.தமிழ்ச்செல்வன், ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் வே. சாந்தா ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் 1,896 பயனாளிகளுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் ஏழை எளிய மக்கள், முதியோர், மாணவ மாணவிகள், மகளிர், குழந்தைகள் என நாட்டு மக்களின் நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும் எண்ணற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் மக்களின் குறைகளையும், அவர்களின் தேவைகளையும் கண்டறிந்து அவற்றை கலையும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 22.08.2019 முதல் 31.08.2019 வரையிலான காலகட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்று நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலமாக 177 முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 9,244 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தற்போது ஒன்றரை மாத காலத்திலேயே பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கண்துஞ்சாது அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு, பொதுமக்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குநர் தெய்வநாயகி, கோட்டாட்சியர் சுப்பையா, மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், வேளாண்துறை இணை இயக்குநர் கணேசன், தனித்துணை ஆட்சியர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.