தற்போதைய செய்திகள்

2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு கனிமொழி, ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:-

2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளதால் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். கனிமொழி, ஆ.ராசா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதன்படி வழக்கை  விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கனிமொழி, ஆ.ராசா இருவருமே இப்போது தி.மு.க. எம்.பி.க்களாக உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.