சிறப்பு செய்திகள்

2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீதமும், விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகியசட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நாங்குநேரியில் கழகத்தின் சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கழக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் செய்தனர். கழகம் செய்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அமைதியானமுறையில் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. வயதானவர்கள் வாக்களிக்க தனியாக வீல் சேர்ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. தேர்தல் பணிகளில் 1,333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். துணை ராணுவத்தினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

வாக்குபதிவு  காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றது. நாங்குநேரியில் ஒரு சில இடங்களில் தாமதமாக வாக்குபதிவுதொடங்கியது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. விக்கிரவாண்டியில் 275 சி.சி.டி.வி. கேமராக்களும், நாங்குநேரியில் 295 சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாமதமாக கிடைத்தது. மழை காரணமாக இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டு விட்டது. நாங்குநேரியில் 66.10 சதவீதமும், விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இது குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலை
ஒப்பிடும்போது 81.25 சதவீதம் விக்கிரவாண்டியில் வாக்குபதிவு இருந்தது. இந்த முறை 84 சதவீதமாக பதிவாகியுள்ளது. நாங்குநேரியில் 71.2 சதவீதம் இருந்தது. தற்போது 66.10 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிக அளவு எங்கும் கோளாறு ஏற்படவில்லை. சில இடங்களில் வேலை செய்யாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு புதியதாக அளிக்கப்பட்டது. மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. வசந்தகுமார் எம்பி மீது மக்கள் பிரதித்துவ சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டோம்.

அனைவரும் சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கையையும் ஆணையம் எடுத்தது. ஒரு சில இடங்களில் மழை இருந்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. மற்றபடி அனைத்து இடங்களிலும் மிகவும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வரும் 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு
எண்ணிக்கை மையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.