விளையாட்டு

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.42வது சதத்தை பூர்த்தி செய்த கோலி 120 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது.தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவு அணியின் எவின் லீவிஸ் 65 ரன்கள் சேர்த்தார். மழை குறுக்கிட்டதால் அந்த அணிக்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில், சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.