தற்போதைய செய்திகள்

20 புதிய கல்லூரிகள், 705 பாடப்பிரிவுகளை உருவாக்கி மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்தியவர் முதலமைச்சர் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

கிருஷ்ணகிரி

20 புதிய கல்லூரிகள் மற்றும் 705 புதிய பாட பிரிவுகளை உருவாக்கி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை 49 சதவிகிதமாக உயர்த்தியவர் முதலமைச்சர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் நுண்கலை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழாக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் மா.சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊரக வளர்ச்சி தன்னிறைவு திட்டம் மூலம் ரூ.50 லட்சம், ஐ.வி.டி.பி தொண்டு நிறுவன பங்களிப்பு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழகமே எனது குடும்பம் தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலம் என வாழ்ந்து மறைந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்/ அம்மாவின் எண்ணங்களையும், விருப்பங்களையும் ஈடேற்றும் அரசாகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கிராமப்புறத்தைச் சார்ந்தோர், பின்தங்கிய பகுதியைச் சார்ந்தோர், மகளிர் ஆகியோர் சம வாய்ப்பினைப் பெறும் பொருட்டு, அவர்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே, குறைந்த செலவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை அம்மா அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார் என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அம்மா அவர்கள் ஆட்சிகாலத்தில் உயர்கல்வியில் 961 புதிய பாட பிரிவுகளும், தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிகாலத்தில் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 5- பல்வகை கல்லூரிகள் 705- புதிய பாட பிரிவுகள் 8- முதுகலை பாட பிரிவுகள், 5- எம்.பில் பாடபிரிவுகள், 5- முனைவர் பாடதிட்டங்கள் புதியதாக துவக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியானது 2015-16-ம் கல்வியாண்டு முதல் தேசிய மதிப்பீட்டு தர நிர்ணய குழுவினரால் டீ+ தகுதி பெற்று விளங்குகிறது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும். இக்கல்லூரிக்கு ரூசா திட்டத்தின் கீழ் 2018-19 கல்வி ஆண்டில் ரூ.2 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூ.29,15,832, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.29,15,831 என மொத்தம் ரூ.58,31,662 உதவிதொகையாக வழங்கப்பட்டுள்ளது. கல்வியோடு கலையும், ஒழுக்கமும் இந்த கல்லூரியில் போதிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. 2020-21 நிதியாண்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5560 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

1914-ம் ஆண்டு இந்தியாவில் 3 மகளிர் கல்லூரிகள் துவக்கப்பட்டது. அதில் ஒன்று தான் சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரியாகும். தமிழ்நாட்டில் முதல் மகளிர் பல்கலை கழகமான அன்னை தெரசா பல்கலை கழகத்தை 1984 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. 2013-14ம் கல்வி ஆண்டில் அம்மா அவர்கள் காரிமங்கலம் ஒரு மகளிர் கல்லூரியும், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரியும், 2017-18-ம் நிதியாண்டில் விழுப்புரத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் துவக்கப்பட்டது.

மேலும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரியை ஒரு நேரத்தில் கொண்டு வந்த அரசு அம்மாவுடைய அரசு. 2011 முதல் 2020 வரை 85 புதிய கல்லூரிகளையும், 1666 புதிய பாடபிரிவுகளை உருவாக்கியதன் காரணமாக இந்திய அளவில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 49 சதவிகிதமாக உயர்ந்து உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் உயர்கல்வித்துறை மாணவர் சேர்கை விகிதம் 36 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.50,000, தாலிக்கு தங்கம் 8 கிராம் வழங்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழவினருக்கு கடன், மகளிர் காவல் நிலையம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு அம்ம இருசக்கர வாகனம், கல்பனா சாவ்லா விருது, அவ்வையார் விருது என எண்ணற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

விழாவில் பல்கலைக்கழகத் தேர்வு, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பா.பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.எம்.மாதையன், பால் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவர் பி.கே.குப்புசாமி, ஒன்றிய குழு தலைவர்கள் அம்சாராஜன், சசி வெங்கடசாமி, பையூர்.ரவி, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் முனிவெங்கடப்பன், தென்னரசு, பி.என்.ஏ.கேசவன், கே.ஆர்.சி.தங்கமுத்து, ஜெயபால், மற்றும் தூயமணி, வெங்கடசாலம், கே.நாராயணன், சாகுல்அமீது, தேவேந்திரன், பால்ராஜ், வட்டாட்சியர் ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தேவி, ஒன்றிய குழு உறுப்பினர் தா.விஜயலட்சுமி, இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.