தற்போதைய செய்திகள்

200 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்…

திருநெல்வேலி:-

திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 200 பேருக்கு கோழிகுஞ்சுகளை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு கோழிகுஞ்சுகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தவும் 2018-19-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 77,000 பெண் பயனாளிகளுக்கு தலா 50 அசில் இன நான்கு வார வயதுடைய கோழிக்குஞ்சுகள் மற்றும் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் வழங்க தமிழகத்தில் 31 மாவட்டங்களில் செயல்படுத்திட ஆணையிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் வசிக்கும் பெண்களில் மிகவும் ஏழ்மையான,கணவனால் கைவிடப்பட்ட ,விதவை, மாற்றுத்திறனாளி ஆகியோர் இலக்கு மக்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும் பெண் பயனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.2,43,70,000 மதிப்பீட்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பெண் பயனாளிகள் வீதம் 19 ஊராட்சி ஒன்றியத்திற்கு 3800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் பயனாளிக்கு 50 எண்ணம் கொண்ட 4 வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும் இரவு கோழி தங்கும் கூண்டு செய்திட ரூ.2500 வழங்கப்பட உள்ளது. மேலும் பயனாளிக்கு கால்நடை உதவி மருத்துவர் மூலம் ஒரு நாள் கோழி வளர்ப்பு பயிற்சி மற்றும் ரூ.30 மதிப்பீட்டில் பயிற்சி கையேடும் வழங்கப்பட உள்ளது. பயனாளிக்கு ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி ஊக்கத் தொகையாக ரூ.150 வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இனை இயக்குநர் ஆறுமுக பெருமாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பாபு, குருவிகுளம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அந்தோணிராஜ், முக்கியபிரமுகர்கள் கண்ணன் (எ)ராஜீ, ரமேஷ், சுப்பையாபாண்டியன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.