தற்போதைய செய்திகள்

2011 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்…

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பட்டிவீரன்பட்டியில் 2011 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி என்.எஸ்.வி.வி மேல்நிலைப்பள்ளியில் நேற்று பல்வேறு துறைகளின் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 323 பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கம் ரூ.81.55 லட்சம் மதிப்பீட்டிலும், வருவாய்த்துறை மூலமாக 124 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா ரூ.23.26 லட்சம் மதிப்பீட்டிலும், முதியோர் உதவித்தொகை 127 பயனாளிகளுக்கு ரூ.1.27 லட்சம் மதிப்பீட்டிலும்,

கால்நடைத்துறை மூலமாக 40 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள் ரூ.2.56 லட்சம் மதிப்பீட்டிலும், 60 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் ரூ.2.37 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பாக 50 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் ரூ.52 லட்சம் மதிப்பீட்டிலும், 34 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலமாக 50 பயனாளிகளுக்கு குழித்தட்டு நாற்றுகள் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக 5 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம் ரூ.2.64 இலட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1198 மாணவ, மாணவிகளுக்கு ரூ.44.63 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் என ஆக மொத்தம் 2011 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:- 

புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஏழை, எளியோர், விவசாயிகள் என அனைவருக்கும் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து, கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா 50 விலையில்லா நான்கு வார வயதுடைய அசீல் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டம் கிராமபுறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கி, தனிநபர் வருமானத்தை பெருக்கி, கிராமபுற பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 2800 மகளிர்களுக்கு தலா 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் வீதம் 1,40,00,000 கோழிக்குஞ்சுகள் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது. இதே போன்று 5376 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 21,504 ஆடுகள் ரூ.6.96 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது. மேலும், தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சமூக நலத்துறையின் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2274 பயனாளிகளுக்கு ரூ.5.69 கோடி நிதியுதவியும், ரூ.5.08 கோடி மதிப்பிலான 18.088 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியுடன் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், 2426 பயனாளிகளுக்கு ரூ.12.13 கோடி நிதியுதவியும் ரூ.3.08 கோடி மதிப்பிலான 19.408 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ்,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.பி.பி.பரமசிவம், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை) கவிதா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஜீவா மற்றும் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், நகர செயலாளர் சேகர், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் பீர்முகமது, முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.