தற்போதைய செய்திகள்

2,490 பயனாளிகளுக்கு ரூ.13.77 கோடி நலத்திட்ட உதவி – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.

திண்டுக்கல்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் 66-வது கூட்டுறவு வாரவிழாவில் 2,490 பயனாளிகளுக்கு ரூ.13.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி, தலைமையில் நேற்று 66-வது கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் 133 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 1,622 உறுப்பினர்களுக்கு ரூ.718.08 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவியும், 47 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 267 உறுப்பினர்களுக்கு ரூ.101.1 லட்சம் மதிப்பிலான சிறு வணிகர் கூட்டுப்பொறுப்புக்குழு கடனுதவியும், 359 விவசாயிகளுக்கு ரூ.399.38 லட்சம் மதிப்பிலான மத்தியகால கடனுதவியும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் கடனுதவியும், 134 விவசாயிகளுக்கு ரூ.114.5 லட்சம் மதிப்பிலான பண்ணை சாரா கடனுதவியும், 97 நபர்களுக்கு ரூ.38.90 லட்சம் மதிப்பிலான சிறு வணிகக்கடனுதவி என மொத்தம் 2,490 பயனாளிகளுக்கு ரூ.13.77 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டியவழியில் செயல்படும் அம்மா அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக ஊரகப்பகுதி மக்களுக்கு, பல்வேறுகடன் வசதிகள் அளித்தும், குறுசிறு விவசாயிகளுக்கு, கடன்கள் வழங்கியும், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின், பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான சேவையினை புரிந்து வருகிறது.

அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, பின்தங்கி, நலிவுற்ற நிலையில் இருந்த கூட்டுறவுத்துறையினை சீரமைத்து, செம்மைப்படுத்தி, சட்டப்போராட்டத்தின் வாயிலாக தேர்தல் நடத்தி, அதில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, சிறப்பான முறையில் நல்வழிப்படுத்தி, கட்டமைத்தார். அதனால்தான், அனைத்து விதமான பதவிகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் தங்களது பொது பொருளாதார தேவைகளை மேம்படுத்தி கொள்வதற்காக, தாங்களாகவே இணைந்து மக்களாட்சி முறையில், சமத்துவ அடிப்படையில் இயங்கும் முறையே கூட்டுறவாகும்.

கூட்டுறவுத்துறை குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதன் மூலம் சிறுதொழில், விவசாயம், சந்தைப்படுத்துதல், சிறுகுறு விவசாயிகள் கடன், பயிர்கடன், நகை ஈட்டின்பேரில் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளான் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், குறைந்த வாடகையில் கிட்டங்கி வசதி அளித்தல், தானிய ஈட்டின்பேரில் கடன், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்கு கடன், டாப்செட்கோ, தாம்கோ திட்டங்களின் கீழ் கடன், மத்திய கால கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்குவதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான சேவை புரிந்து வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை களைவதற்கு குடிமைப்பொருட்களை வாங்குபவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டார். அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, முறைகேடுகள் நடப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவிநியோகத் திட்டத்தினை முழுமையான கணினி மயமாக்கி, அதன் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள், தரமான முறையில் உரிய பயனாளிகளுக்கு உரிய அளவில் முழுமையாக சென்றடைவதற்கு மின்னணு நிர்வாக முறையில் சேவைகள் வழங்கி, சேவைத்தரத்தினை மேம்படுத்த நியாய விலை கடைகளில் விற்பனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் பெறும்பொழுது அவர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்படும் (2011 முதல் 2018 வரை) தமிழக அரசின் சார்பில் கடந்த ஆண்டு முதலமைச்சரின் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, வெல்லம் மற்றும் கரும்பு, இதனுடன் ரூ.1,000 ரொக்கமாக 5,93,633 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.996.05 கோடி வைப்புத்தொகையாக பெறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் 24 நடமாடும் நியாயவிலை கடைகளும், 13 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளும் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும், 35 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி சீரிய முறையில் இயங்கி வரும் தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் தமிழக மக்களின் பங்களிப்புடன், கூட்டுறவு இயக்கமானது அனைத்து வகையிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தின் நலன் கருதி பல்வேறு புதுமையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், குறிப்பாக சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக கூட்டுறவு நிறுவனங்கள் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இவ்விழாவில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ப.உமாமகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் எ.டி.செல்லச்சாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வெ.பாரதிமுருகன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் துணைபாதிவாளர் கோ.பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.