கன்னியாகுமரி

258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், இறச்சகுளம் சமுதாயநலக்கூடம் மற்றும் ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற கட்டடம் ஆகிய இடங்களில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்,விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் 258 பயனாளிகளுக்கு, ரூ.32.89 லட்சம் மதிப்பில் 1032 விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 

மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்வு உயர எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தந்தார். அவர்கள் வழியில் நடைபயிலும் முதலமைச்சர் தலைமையிலான நல்லரசு பல்வேறு திட்டங்களை மக்கள் நலன்கருதி, தந்து நிறைவேற்றி வருகிறது. அவ்வகையில், முதலமைச்சரால் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில், விலையில்லா வெள்ளாடுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக, இவ்வாறான திட்டங்கள் எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழகத்தில் மட்டும் அம்மா அவர்களின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 விலையில்லா வெள்ளாடுகளும் அதற்கான கொட்டகைகள் அமைக்க ரூ.2000, காப்பீடுக்காக ரூ.300, போக்குவரத்து செலவிற்காக ரூ.150 மற்றும் பயிற்சிக்காக ரூ.300 ஆக மொத்தம் ரூ.12,750 செலவில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தரப்பட்டுவருகிறது. தாய்மார்கள், இத்திட்டத்தினை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

இவ்விழாவில், கால்நடைப்பராமரிப்புத்துறை இணை இயக்குநர் எஸ்.ஜோசப்சந்திரன், உதவி இயக்குநர் மரு.ஆர்.சுவாமிநாதன், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சாம்ராஜ், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா ராமசந்திரன், விக்ரமன், ஜெயசீலன், ரபிக், நாகர்கோவில் நகர கழக செயலாளர் சந்துரு, அணி செயலாளர்கள் மனோகரன், ஜெயசீலன், சுகுமாறன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.