இந்தியா மற்றவை

29 செயற்கைக்கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி45 ராக்கெட்…

பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட், எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக் கோள்களை இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக செலுத்தியது. ராக்கெட்டின் நான்காவது நிலை, மற்றொரு சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு, ஆய்வுக்கு பயன்பட உள்ளது.

பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் நேற்று காலை 6.27 மணிக்கு தொடங்கியது. 27 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்து சரியாக காலை 9.27 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் 29 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. சரியாக 17 நிமிடங்கள் கழித்து 749 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுவட்டப் பாதையில், எமிசாட் ((EMISAT)) செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் எமிசாட் செயற்கைக்கோள் 436 கிலோ எடைகொண்டதாகும். எதிரிகளின் ராடார்களை கண்டறிய உதவும் முதல் எலெக்ட்ரானிக் இன்டலிஜென்ஸ் செயற்கைக்கோள் ((First electronic intelligence satellite)). மின்காந்த அலைகளை அளவிடுவதற்கான செயற்கைக்கோள் என்று குறிப்பிடப்படும் இந்த செயற்கைக்கோள், ராணுவ பயன்பாடுகளுக்கு எலெக்ட்ரானிக் உளவுத் தகவல்களை சேகரித்து வழங்கும்.

தொடர்ந்து, 40 நிமிடங்கள் கழித்து 28 நானோ செயற்கைக்கோள்களை, 504 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது. இந்த 28 நானோ செயற்கைக் கோள்களின் மொத்த எடை 220 கிலோ ஆகும். இதில் 24 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்கும், 2 செயற்கைக்கோள்கள் லித்துவேனியாவுக்கும், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு தலா ஒரு செயற்கைக்கோளும் சொந்தமானவை.

வெளிநாடுகளுக்காக வணிக அடிப்படையில் இந்த நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் 29 செயற்கைக் கோள்களை செலுத்திய பிறகு, விண்ணில் ஆய்வுக்கான தளமாக, ராக்கெட்டின் நான்காவது நிலை 485 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுவட்டப்பாதையில் செயல்படும்.

ஒரே ராக்கெட் மூலம் மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் மற்றும் ஆய்வுக்கருவிகள் விண்ணில் செலுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.