திருப்பூர்

297 நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்கள் – திருப்பூரில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்…

திருப்பூர்

திருப்பூரில் நடைபெற்ற விழாவில் 297 நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்களை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்கள் வழங்கும் விழா பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது. திருப்பூர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன், கைத்தறி வளர்ச்சி கழக உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கைத்தறி உபகரணங்களை வழங்கி பேசினார்.

இதன்படி தந்தை பெரியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட 297 நெசவாளர்களுக்கு 90 சதவீத அரசு மானியத்துடன் ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான ஜரிகை சுற்றும் இயந்திரம், தறி செட், அச்சு விழுது, பண்ணை செட், பாவு மற்றும் துணி சுற்றும் ரோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முன்னாள் கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், கனகராஜ், பாலசுப்பிரமணியம் உள்பட சங்க ஊழியர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.