இந்தியா மற்றவை

3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 116 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு…

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி 2 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்துவிட்டது.

3-ம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 116 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அசாம் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, கோவா 2, குஜராத் 26, காஷ்மீர் 1, கர்நாடகா 14, கேரளா 20, மகாராஷ்டிரா 14, ஒடிசா 6, உத்தரபிரதேசம் 10, மேற்குவங்கம் 5, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையுவில் தலா 1 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேலும், திரிபுரா கிழக்கு தொகுதியில் 2-ம் கட்டமாக கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

எனவே, அந்தத் தொகுதியில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவம் உட்பட மொத்தம் 9,300 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.