தற்போதைய செய்திகள்

3-ம் பாலினத்தினருக்கு பன்னோக்கு மருத்துவ மையம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்…

சென்னை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்து பார்வையிட்டு மூன்றாம் பாலின சமூகத்திற்கான ஆதரவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மூன்றாம் பாலினத்தவர் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தலா ரூ.15 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பிரிவு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தில் பாலின மாற்று பன்னோக்கு உயர் சிகிச்சைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற நோயாளிகளை போலவே தங்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் அரசு மருத்துவமனைகளில் எந்தவித தயக்கமுமின்றி வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான பாலின மாற்று அறுவை சிகிச்சை உட்பட அனைத்து பாலின மாற்று சிகிச்சைகளும் வழங்குவதே இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தின் நோக்கம் ஆகும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிகிச்சை முறைகள் விரைவாகவும், அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி பெற்றிடவும் இந்த மையம் ஏதுவாக இருக்கும்.

இம்மையத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர், நாளமில்லா சுரப்பியல் மருத்துவர், பால்வினை நோய் இயல் மருத்துவர், மனநல மருத்துவர் உட்பட அனைத்து சிறப்பு மருத்துவக் குழு செயல்படும். இந்த சிறப்பு பிரிவு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 1 மணிவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறை எண் 108-ல் வழங்கப்படும். சென்னை அரசு பொது மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 17 நபர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த சேவை தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி தரமான முறையில் தொடரப்படும். எனவே மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளளாம். மேலும் ரூபாய் 1.34 கோடி மதிப்பில் பாலின மாற்று தொடர் சிகிச்சை அளிக்க தேவையான கருவிகள் கூடுதலாக வழங்கப்பட்டு இம்மையம் விரைவில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.