தற்போதைய செய்திகள்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளரை அபார வெற்றி பெறச் செய்வோம் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சபதம்…

திண்டுக்கல்:-

திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்வோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவை வெற்றி பெறச் செய்வது தொடர்பாக திண்டுக்கல்லில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கழக பொருளாளர் உதயகுமார் எம்.பி. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினர்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது காங்கிரஸ், மற்றும் அக்கூட்டணி கட்சித் தலைவர்களை மு.க. ஸ்டாலின் வரவழைத்தார். அக்கூட்டத்தில் அடுத்த பிரதமர் ராகுல் தான் என்று முன்மொழிந்தார். இதனை கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அடுத்த சில நாட்களிலேயே மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் ராகுல் பெயரையே சொல்லவில்லை.

அக்கூட்டணியின் பிரதம வேட்பாளர் யாரென்றே தெரியவில்லை.ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என ராகுல் குற்றம் சாட்டினார். அதற்கு நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் விரிவாக விளக்கம் அளித்தார். அதற்கு எதிராக காங்கிரஸ் பதில் அளிக்க முடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர்,. அமைச்சர்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியுமா? அதேபோன்று அம்மா வழியில் நடக்கும் கழக அரசையும் குற்றம் சாட்டுகின்றார் ஸ்டாலின். இந்தியாவிலேயே ஊழலுக்கு ஒரு அரசு கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சி தான். ஊழலின் சக்கரவர்த்தி திமுக தான். இன்று ஸ்டாலின் புத்தரைப் போல் பேசுகிறார்.

அம்மாவின் அரசை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். கழக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. ஜாதி மதப் பிரச்சினை இல்லை, சட்டம்- ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. மக்களின் ஆட்சியாக கழக அரசு உள்ளதால் பிரதமர் மோடி கழகத்துடன் முதன்முதலில் கூட்டணி அமைத்துள்ளார். தமிழகத்தை அம்மாவைப் போல் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்து வருவதால் தான் பாமகவும் நம்முடன் கூட்டணி அமைத்துள்ளது .

இதேபோன்று தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளன. கழகத்தின் வெற்றிக்காக வியர்வையும், ரத்தமும் சிந்தக் கூடிய நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளனர். நமது கூட்டணி கட்சி வேட்பாளரான ஜோதி முத்து மிக சாதாரணமான மனிதர். அவரை மருத்துவர் ராமதாஸ் நம்மிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடங்களிலெல்லாம் மகிழ்ச்சியுடன் எழுச்சியுடன் மக்கள் நம்மை வரவேற்கின்றனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து திண்டுக்கல் தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்றிய உதயகுமார் போல் ஜோதி முத்துவும் செயல்படுவார். எனவே கழக நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்துக்கு உழைப்பது போல் உழைத்து நமது கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அரும்பாடு படவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

கூட்டத்தில் ஆவின் சேர்மன் ஏ.டி.செல்லச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், பிரேம்குமார், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் திண்டுக்கல் ஜெயசீலன், சாணார்பட்டி ராமராசு, ரெட்டியார்சத்திரம் ராஜ்மோகன், ஆத்தூர் பி.கே.டி.நடராஜன் தொப்பம்பட்டி முத்துசாமி, கொடைக்கானல் மேல்மலை முருகன், நத்தம் சாஜஹான், சிவ லிங்கம், முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்கத்தலைவர் பாரதி முருகன், மாவட்ட பேரவை செயலாளர் ராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்மதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.