தற்போதைய செய்திகள்

3.20 லட்சம் விவசாயிகளுக்கு விலையில்லா தீவன விதை தொகுப்புகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை

3.20 லட்சம் விவசாயிகளுக்கு விலையில்லா தீவன விதை தொகுப்புகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

பசுந்தீவன உற்பத்திக்கான நிலப் பரப்பினை அதிகரித்து பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு 3.20 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் ரூ.12.00 கோடி செலவில் விலையில்லா தீவன விதைத்தொகுப்புகள் வழங்கப்பட்டு 10,000 ஏக்கர் நிலம் இறவைதீவனப்பயிர் கோ (எப்எஸ்) 29 / கோ-4 / வேலி மசால் இறவை சாகுபடியின் கீழும், 70,000 ஏக்கர் நிலம் தீவன சோளம் / மக்காச்சோளம் / காராமணி மானாவாரி சாகுபடியின் கீழும் கொண்டு வரப்படும்.

விவசாயிகளால் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனப் பயிர்களை குறுகிய காலத்தில், வேலையாட்கள் உழைப்பைத் தவிர்த்து, அவற்றின் தரம் மாறாமல் மற்றும் வீணாகாமல், பசுந்தீவனம் அறுவடையை இயந்திரமயமாக்குவதன் மூலம் அறுவடையில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, ரூ.4.70 கோடி செலவில் பசுந்தீவனம் அறுவடை செய்யும் கருவிகள் 75 சதவிகித மானியத்தில் 2500 சிறு விவசாயிகள் மற்றும்குறுவிவசாயிகளுக்குவழங்கப்படும்.

தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்குதல் திட்டத்தின் கீடிந ரூ.9.37 கோடி ஒதுக்கீட்டில் 33 மாவட்டங்களில் உள்ள 34 உப வடிநிலங்களில் 1,71,050 செயற்கை முறை கருவூட்டல், 3,280 பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து செயற்கை முறை கருவூட்டல், 9,828 கால்நடைகளில் மடிவீக்க நோய் மேலாண்மை பணிகளும், 6,300 கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கட்டிகள் வழங்குதலும், 2,223 ஏக்கரில் பசுந்தீவன சாகுபடி, 1,008 மலடுநீக்க சிகிச்சை முகாம்கள் மற்றும் 10,080 கால்நடைகளுக்கு திட்டமிட்ட இனப்பெருக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் பராமரிக்கப்படும் ஆட்டினங்களின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன்களை மேம்படுத்தி மரபியல் ரீதியான உயர்தர சந்ததிகளை உருவாக்கிட தேவையான அளவு பசுந்தீவனம் தொடர்ந்து வழங்குவதற்காக ரூ.2.99 கோடி செலவில் 75 ஏக்கர் நிலப்பரப்பு பலவகைப் புற்கள், பயறு வகைகள் மற்றும் சிற்றின மரங்களை உள்ளடக்கிய மரத்தீவன மேய்ச்சல் நிலமாக மேம்படுத்தப்படும்.

சென்னை, சைதாப்பேட்டையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கிவரும் கால்நடை பன்முக மருத்துவமனை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கால்நடைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ரூ.3.00 கோடி செலவில் நவீன கட்டமைப்புடன் கூடிய உள்நோயாளி பிரிவு, செல்லப் பிராணிகளுக்கான பரிசோதனைக் கூடம், நவீன சிகிச்சை அறை, நவீன ஆய்வகம் மற்றும் நுண்ணலை நுண்ணோக்கி ஆடீநுவுக்கூடம் போன்ற வசதிகளுடன் வலுப்படுத்தப்படும்.

கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் துறை நடவடிக்கைகளை கண்காணித்து துறையின் திட்டங்கள் அலுவலர்கள் மூலம் செம்மையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் ஒவ்வொன்றும் ரூ.2.25 கோடி வீதம் மொத்தம் ரூ.9.00 கோடி செலவில் நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் கட்டப்படும்.

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் கால்நடை நோய்களுக்கான தடுப்பு மருந்து உற்பத்தி நிலையத்தில் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி தடுப்பு மருந்து உற்பத்திக்கூடங்களும் நல்உற்பத்தி தரத்திற்கு மேம்படுத்தப்படவுள்ள நிலையில், தற்போது கால்நடை நோய் நிர்ணயிப்பான் உற்பத்திக் கூடம் ரூ.8.02 கோடி செலவில் நல்உற்பத்தி தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு கன்றுவீச்சு நோய், மடிவீக்க நோய் மற்றும் கோழிக்கழிச்சல் போன்ற நோய்களைக் கண்டறியும் நிர்ணயிப்பான்கள் சிறந்த தரத்தில் உற்பத்தி செய்யப்படும்.

வெறிநய் என்பது நாய்களின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் கொடிய நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் 100 விழுக்காடு இறப்பு நேரிடும். இதற்கான சிகிச்சை எதுவும் இல்லாத நிலையில், வெறிநோயினை கட்டுப்படுத்துவதற்காக 1.67 கோடி ரூபாய் செலவில் நகர்புறங்களில் உள்ள குறிப்பாக ஆதரவற்ற சுமார் நான்கு இலட்சம் நாய்களுக்கு முற்காப்பு நடவடிக்கையாக வெறிநோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட குதிரையினங்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் புரவிக்காய்ச்சல் நோயினை குதிரையினங்களில் கண்காணித்து, நோய் பரவுவதை தடுப்பதற்காக ரூ.50 லட்சம் மதிப்பில் உதகமண்டலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவுகளில் புதிய நவீன கருவிகள் மற்றும் உரிய நோய் கண்டறியும் கலங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, புரவிக்காய்ச்சல் நோய் கண்டறியும் வசதிகள் மேம்படுத்தப்படும்.

ஆதரவற்ற நாய்களால் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் பிற இன்னல்களில் இருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பில் 200 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு நாய்கள் இனவிருத்திக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை புத்தாக்கப் பயிற்சியும், 200 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்களுக்கு நாயினங்களை கையாளுதல் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படும்.

கால்நடை வளர்ப்போரை ஊக்குவித்து துறை செயல்பாடுகளுடன் ஒருங்கிணைப்பதற்காகவும், களப்பணிகள் விரைவாக சென்றடைவதற்கு ஏதுவாகவும் ரூ.10.00 கோடி செலவில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் உடையார்பாளையம், திருக்கோவிலூர், லால்குடி, குளித்தலை, இலுப்பூர், உத்தமபாளையம், கும்பகோணம், ஓசூர், திருச்செந்தூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பத்து கள கண்காணிப்பு கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016யை அமல்படுத்தும் பொருட்டு, கால்நடை நிலையங்களில் நோய் கண்டறிதல் மற்றும் நோய்சிகிச்சை மூலம் சேகரிக்கப்படும் உயிர் மருத்துவக் கழிவுகளான ஊசி, மருந்துக்குப்பிகள், நோய்களைப் பரப்பும் திசுக்கழிவுகள் ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட முறையில் அப்புறப்படுத்துவதற்காக ரூ.7.00 கோடி மதிப்பில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் உயிர் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இன்றைய கிடேரிக் கன்று, நாளைய பசு என்ற கூற்றின்படி, கன்றுகளின் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும், அவற்றின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காகவும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற 12,000 பயனாளிகள் ரூ.4.10 கோடி மதிப்பில் உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் அடங்கிய கன்றுகளைப் பராமரிக்கத் தேவையான மருந்துப் பெட்டிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் பசுந்தீவன உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், மேய்ச்சல் நிலங்களின் உற்பத்தித் திறன், தீவனப் பயிரின் தரம் மற்றும் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்காக கொழுக்கட்டைப்புல் மற்றும் முயல் மசால் போன்ற அந்ததந்த பகுதிக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்களை பயிர் செடீநுது எல்லை பயிராக மரத் தீவனம் நடுவதற்காக ரூ.1.67 கோடி செலவில் 20 மாவட்டங்களில் 1000 ஏக்கர் மேய்க்கால் நிலங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.

தமிழ்நாட்டின் வெள்ளாட்டினங்களில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களை இருப்பிடமாகக் கொண்ட கன்னி மற்றும் கொடி ஆட்டினங்களைப் பாதுகாக்கவும், மரபியல் திறனை உயர்த்தி, இனவிருத்திக்காக பண்ணையாளர்களுக்கு வழங்கி, நிலைத்த வருமானத்தை பெறும் பொருட்டு, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும்.

சென்னை சிவப்பு செம்மறியாட்டு இனத்தைப்பாதுகாத்து, மரபியல் திறனை மேம்படுத்தி அவ்வினத்தைப் பிரபலப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மூலம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கத்தில் ரூ. 2.85 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய வட தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலும் உள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் பயனடைவார்கள்.

தமிழ்நாட்டில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் சேலம் கருப்பு வெள்ளாட்டினங்களின் மரபியல்திறனை உயர்த்தி, பாதுகாத்து, பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட இனவிருத்திக்கென வழங்கும் பொருட்டு, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்லில் சேலம் கருப்பு வெள்ளாட்டினப்பண்ணை, ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஆட்டுப்பண்ணையாளர்கள் பயனடைவார்கள்.

விலங்குவழி பரவும் நோய்கள் பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. கால்நடைகளைத் தாக்கி மனிதனுக்கும் உயிர்சேதம் உண்டாக்கும் எலிக்காய்ச்சல் நோய், கருச்சிதைவு நோய் மற்றும் வெறிநோய் ஆகியவற்றை விரைவில் கண்டுபிடித்து அந்நோய்களைக் கட்டுப்படுத்தும் இலக்குடனும், காவேரி டெல்டா பகுதி பண்ணையாளர்களுக்கு மனிதனைப் பாதிக்கும் இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழகத்தின் காவேரி டெல்டாவில் விலங்கு வழிப்பரவும் நோயறி ஆய்வகம் ரூ.2.54 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாட்டில் நிறுவப்படும்.

தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளித்து மாடுகளில் பால்உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து மூலம் கறவை மாடுகளின் பால் உற்பத்தியைப் பெருக்குதல் எனும் திட்டம் ரூ.2.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 21000 கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு கறவை மாடுகளில் பால் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் உபரி வருவாய் பெற வழிவகை செய்யப்படும்.

கால்நடைகளின் உற்பத்தித் திறன் மற்றும் இனவிருத்தி மேம்பட தீவனம் மிகவும் அவசியம், பெருகிவரும் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய இன தீவனப்பயிர்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பளவில் தீவன விதை உற்பத்திப் பிரிவு நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.1.49 கோடி செலவில் அமைக்கப்படும்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை இருப்பிடமாகக் கொண்ட திருச்சி கருப்பு செம்மறியாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், மரபியல் திறனை உயர்த்தவும் திருச்சி கருப்பு செம்மறியாட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்ட பாலக்கோடு ஒன்றியத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இதன்மூலம் தரம் வாய்ந்த ஆடுகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருமானம் அதிகரிக்க வழிவகை செய்யப்படும்.

கால்நடை பராமரிப்பில், ஆய்வின் மூலம் பயனுள்ளதாக அறியப்படும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் உடனுக்குடன் பண்ணையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், இவ்வாண்டில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்படும். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசினார்.