சிறப்பு செய்திகள்

ரூ.36 கோடியில் காவல்துறை புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் ரூ.36 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்பு பணித்துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் – கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணிக்காக 10 கோடியே 88 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 137 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 25 கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 124 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசின் சிறைத்துறை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து, மேலக்கோட்டையூரில் முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “காவலர் பொதுப் பள்ளி” கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப்பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணிக்காக 10 கோடியே 88 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 137 காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், பெரம்பலூர் – துரைமங்கலத்தில் 76 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் – மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ஆம் அணிக்காக 48 காவலர் குடியிருப்புகள், என 15 கோடியே 21 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 124 காவலர் குடியிருப்புகள்,சென்னை மாநகரம் – சிட்லபாக்கம் மற்றும் திருமங்கலம், இராமநாதபுரம் மாவட்டம் – உத்திரகோசமங்கை, தஞ்சாவூர் மாவட்டம் – பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் 4 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள்.

காஞ்சிபுரத்தில் 63 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத்துறை பிரிவு அலுவலகக் கட்டடம். சேலம் மாநகரம் – அன்னதானபட்டியில் 2 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயுதப்படைக்கான நிருவாகக் கட்டடம். வேலூர் மாவட்டம் – அரக்கோணத்தில் 54 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம்; சிவகங்கை மாவட்டம் – தேவகோட்டையில் 1 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள்.

என மொத்தம், 36 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறைத்துறை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் “உங்கள் சொந்த இல்லம்” திட்டப் பயனாளிகள் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவல்துறை பணியாளர்களின் நலன் கருதி, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 51 கோடியே 14 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் “காவலர் பொதுப் பள்ளி” நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் பொதுப் பள்ளிக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறை கையாண்ட வழக்குகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகளை தொகுத்து புதிதாக தயாரிக்கப்பட்ட “ஆண்டு மலர் 2018” என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.