சிறப்பு செய்திகள்

4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

புதுடெல்லி:-

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதே நாளில் தமி்ழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் ஆணையம் அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்கவில்லை. இதற்கிடையே சூலூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் கனகராஜ் மறைவையொட்டி அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வழக்குகள் முடிவடைந்து விட்டதால் மூன்று தொகுதிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதியுடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கும் வருகிற மே மாதம் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று தான் மக்களவை தொகுதிக்கான இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 30. திரும்ப பெற கடைசி நாள் மே 1-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ந்தேதி வெளியிடப்படும். வாக்குப்பதிவு மே 19-ந்தேதி நடைபெறும்.

23-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளுடன் இந்த 4 தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.