தமிழகம்

4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 26-ந்தேதி துணை ராணுவத்தினர் வருகை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை:-

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 26-ந்தேதி துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை தர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி 

மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள இடத்தில் பெண் அதிகாரி நுழைந்தது தொடர்பாகக் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிபாலாஜி மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.அங்கு அவர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் நடந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்திவிட்டு இது தொடர்பாக அறிக்கையை எனக்கு அளிப்பார்.

இதன் அடிப்படையில் இது தொடர்பாக முழு விவரம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் 24 மணி நேரமும் இருக்கலாம். அதற்குத் தேர்தல் ஆணைய அனுமதி உள்ளது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கட்சியினர் பொன் பரப்பி உள்ளிட்ட சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் இதுதொடர்பான முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் எடுக்கும். தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் தமிழகத்தில் உள்ளது.

தற்போது பறக்கும்படையினர் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இருப்பார்கள். மேலும் கண்காணிப்பு படை அங்கு இருக்கும். மற்ற இடங்களில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை. இதுகுறித்து அறிவிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் .தபால் வாக்குகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தனியாக மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும்.

நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 13 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர். இவர்கள் வருகிற 26-ந்தேதி தமிழகம் வருகிறார்கள். பின்னர் அவர்கள் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.