தற்போதைய செய்திகள்

4 லட்சம் மீட்டர்கள் வாங்க 1200 கோடி மத்திய எரிசக்தி அமைச்சரிடம், அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தல்

புதுடெல்லி:-

மின் தொடரமைப்பு வணிக இழப்புகளை முற்றிலும் தடுக்க 4 லட்சம் மீட்டர்கள் வாங்க வேண்டியிருப்பதால் அதற்கு 1200 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தினார்.

டெல்லியில் நேற்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர் (தனிபொறுப்பு) ஆர்.கே.சிங்கை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கூடுதல் தலைமை செயலர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம்கபூர் ஆகியோர் சந்தித்தனர்.

பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரதின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கு பகிர்மான மின்மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை முழுமையாக மாற்றுவதற்கு தமிழ்நாட்டில் 4 லட்சம் மீட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு ரூ.1200 கோடி நிதி தேவைப்படுகிறது. ஆகவே மேற்கண்ட நிதியினை வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான தொகை 98 சதவீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை 3 மாதத்தில் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலர்கள் அறிவுறுத்திவுறுத்தியுள்ளார். மேலும் மின்சார பயன்பாட்டினை துல்லியமாக கண்காணிப்பதற்கு வசதியாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1.4 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை படிப்படியாக அனைத்து மீட்டர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றி அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கு 01.08.2019 முதல் வங்கியின்(L.C) மூலம் நேரடியாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரியநாளில் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.