சிறப்பு செய்திகள்

40 தொகுதிகளிலும் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி…

தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர்கள் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆவார்கள். இந்த மெகா கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமோக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் உறுதிபட தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதி கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

சென்னை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில்  கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, தே.மு.தி.க.வை சேர்ந்த சுதீஷ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பெருந்தலைவர் காமராஜ் கட்சியை சேர்ந்த என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வரவேற்றார். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் சுமூகமான முறையில் முடிவுற்றுள்ளன. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் பேசியதாவது:-

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கூட்டணியை உருவாக்கி அதை திறம்பட ஒருங்கிணைத்தமைக்காக முதலில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக இந்த மெகா கூட்டணியை உருவாக்குவதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கடுமையாக முயற்சி மேற்கொண்டதன் பலனாக இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதற்காக இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி முதலியோர் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த கூட்டணி உருவாவதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது. அதேபோல் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சுதீஷ் ஆகியோரும் இந்த கூட்டணியில் இணைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற நாம் அனைவரும் பிரார்த்தனை செய்து வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். இக்கூட்டணியில் எனது மரியாதைக்குரிய ஜி.கே.வாசன் இணைந்திருக்கிறார். அவர் எனது நீண்டகால நெருங்கிய நண்பர். என்னுடன் அமைச்சரவையில் பணியாற்றியவர். அதேபோல் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் நமது கூட்டணியில் இணைந்திருப்பது நமது வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜ் கட்சியை சேர்ந்த என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.நமது மெகா கூட்டணி புதுவை தமிழகம் உள்பட 40 தொகுதிகளிலும் வென்றெடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அதற்கு இங்குள்ள தலைவர்களே உதாரணமாகும். அவர்களின் கடுமையான உழைப்பால் மக்களின் ஆதரவோடு நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.