தற்போதைய செய்திகள்

40 தொகுதியிலும் கழக கூட்டணியே அமோக வெற்றிபெறும் – நாகை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…

நாகப்பட்டினம்:-

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழக கூட்டணியே அமோக வெற்றிபெறும் என்று நாகையில் நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மா அரசின் இரண்டாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணி குறித்து கழக அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும். சீர்காழி சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.பாரதி வரவேற்றார்.

அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நாகை மாவட்ட கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபால், மாவட்ட அவைத்தலைவர் இரா.ஜீவானந்தம், கழக மீனவர் பிரிவு செயலாளர் கே.ஏ.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது;-

அம்மா பேரவை சார்பில் 71-வது பிறந்த நாள் விழாவை வெகுசிறப்பாக கொண்டாடுவதற்காகவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கவும் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கழகம் மகத்தான வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் அம்மா அரசின் பல்வேறு திட்டங்களையும் அம்மாவின் தியாகத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி அம்மா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.தன்னுடைய பிறந்தநாளை தானே கொண்டாடாமல் நாடே கொண்டாடும் வகையில் வாழ்ந்த ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா மட்டும் தான். கழகத்திற்காக அணி திரண்டோர் தொண்டர்களாக, வீராங்கனைகளாக வருகை தந்திருக்கிற என் தெய்வத்தலைவி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழை சொல்வதிலே எந்த தியாகத்துக்கும் ஈடாகாது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனித அரசை முதல்வர் பொறுப்பேற்று இந்த இரண்டாண்டு சாதனைகளை எடுத்து சொல்வோம். எதிர் வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். அம்மாவின் புகழை கூறுவதற்கே இந்த கூட்டம் கூடியிருக்கிறது. பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதை வழிநடத்தியவர் புரட்சித்தலைவி அம்மா. இப்போது இருக்கின்ற காலகட்டத்திலே அம்மாவின் பிறந்த நாளானது ஏழை எளியோர்களுக்கும் நலம் பயக்கின்ற விழாவாகவும், பசி தீர்க்கின்ற விழாவாகவும் கண்தானம், ரத்ததான விழாவாகவும் நாம் காலம் காலமாக ெகாண்டாடி வருகிறோம்.

19-ந்தேதி முழுபவுர்ணமி அன்று அம்மா பிறந்த நட்சத்திரம் மகம் நட்சத்திரம். அன்று காலையிலே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க இணைந்தது. மதியம் பா.ஜ.க இணைந்தது. நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம் என்று ஸ்டாலின் சொல்கிறார். இரண்டு நாளில் புரட்சித்தலைவி அம்மாவின் அரசை கலைத்து விடுவோம் என்று ஸ்டாலின் சொன்னார். இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு வாரம் அல்ல, இரண்டு மாதமல்ல, இரண்டு ஆண்டுகள் சாதனை புரிந்தது நம் அம்மா அரசு. மக்கள் சேவை தான் கழகத்தினருக்கு தெரிந்த ஒரே பணி. கழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததில் 6500 கோடி ரூபாய் வருவாய் துறைக்கும், 8500 கோடி ரூபாய் காவல்துறைக்கும், பத்தாயிரம் கோடி விவசாயத்திற்கும் 28 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காகவும் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு.

அது மட்டுமல்ல 1 கோடியே 98 லட்சத்து 54 ஆயிரத்து 617 குடும்பங்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கியதும் கழக அரசு தான். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ. 2000 வழங்க ஆணையிட்டதும் கழக அரசு தான். நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது புரட்சித்தலைவி அம்மாவின் வைர வரி. அதற்கேற்ப அ.இ.அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிக்கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிபெற ஓய்வு, உறக்கம் இல்லாது, ஒருங்கிணைந்து களப்பணியாற்றி, வெற்றிக்கனியை ஈட்டி புரட்சித்தலைவி அம்மாவின் கனவை நனவாக்கி அம்மாவின் ஆன்மாவுக்கு சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள் கடலூர் உமாமகேஷ்வரன், திருவாருர் பொன் வாசுகிராம். தஞ்சாவூர் வடக்கு எல். தயாளன். அம்மா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாலன், ரங்கநாதன், சக்தி, நடராஜன், கோடிமாரி, கலையரசன், மாவட்ட பொருளாளர் வா.செல்லையன், மாவட்ட இணைச்செயலாளர் என்.மீனா, மாவட்ட துணை செயலாளர் எஸ்.செல்வி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், கிரிதரன், ெஜயராஜ மாணிக்கம், நற்குணன், சிவா, சுந்தரராஜன், தமிழரசன், சந்தோஷ்குமார் குணசேகரன், நகர செயலாளர்கள் தங்க கதிரவன், வி.ஜி.கே செந்தில்நாதன், பக்கிரிசாமி, மற்றும் மகளிரணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.