தற்போதைய செய்திகள்

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றி – பெறும் ஜி.கே.வாசன் உறுதி…

பெரம்பலூர்:-

ராகுல்காந்தியை தோற்கடிக்க கேரளாவில் வேலைபார்க்கும் கம்யூனிஸ்ட்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களை ஏமாற்ற நினைக்கும் தி.மு.க. கூட்டணி கோமாளி ஆகி விடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்து பேசினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்குசேகரித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதை ராஜா, சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பா.ம.க. மாநில துணை செயலாளர் வைத்தி, பா.ஜ.க மாவட்ட செயலாளர் இளங்கோவன், த.மா.கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், புதிய பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

மதவாதத்தால் மக்களை பிளவுபடுத்தும் ஒரே கட்சி காங்கிரஸ் கூட்டண, அ.தி.மு.க. கூட்டணி மறைமுகம் இல்லாத கூட்டணி. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று வைத்து பேசும் கூட்டணி அல்ல. எனக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலின் முதல் கூட்டம் பெரம்பலூர் தான். ஆகவே இவரின் வெற்றி உறுதி. வெற்றி பெற்ற பின்பு உங்களுக்கு நன்றி சொல்ல வருவேன். மீண்டும் ஓராண்டு சென்ற பின். இவரது மக்கள் பணி எப்படி உள்ளது என்பதையும் பார்க்க வருவேன்.

ராகுல்காந்தி கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அவரை தோற்கடிப்பதில் கம்யூனிஸ்ட் கங்கணம் கட்டி வேலை பார்க்கின்றனர். ஆனால் அதே கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்கின்றனர். தமிழக மக்களை ஏமாளியாக்க வேண்டும் என நினைத்தால் எதிர்கட்சியினர் கோமாளி ஆகிவிடுவார்கள். சிறுபான்மையினர் நலம் குறித்து பேசும் காங்கிரசார் ஒருவருக்கு கூட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கவில்லை. அ.தி.மு.க. அரசு பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி உள்ளது. கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள் வழங்கி உள்ளது. இந்த சாதனை மூலம் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், வேப்பந்தட்டை சிவப்பிரகாசம் .மாவட்ட அவைத் தலைவர் துரை, மாவட்டஇணை செயலாளர் ராணி, மாவட்ட துணை தலைவர் லட்சுமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மற்றும் கூட்டணி பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.