தமிழகம்

திருச்செந்தூர்- சாத்தான்குளத்தில் புதிய தாலுகா அலுவலகங்கள் : முதலமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடி

திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டத்திற்கு புதிய தாலுகா அலுவலகங்கள் தலா ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியபட்டணத்தில் அரசு சார்பில் கட்டப்பட்ட சி.பா.ஆதித்தனர் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிநேற்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

1. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலையில் 52 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் (தூண்டில் வளைவு) கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாமிரபரணி, கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் நிலை-IV -க்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டுக்குள் நிறைவு பெற்று இந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

3. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அமராபுரம் கிராமத்தில் கருமேனியாற்றின் குறுக்கே 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை புதிதாக கட்டப்படும்.

4. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும்.

5. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும்.

6. தூத்துக்குடி மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு அணியாபரநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். அங்கு பால் பண்ணை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

7. கடம்பூர் பேரூராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சி, புதூர் பேரூராட்சி மற்றும் 180 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் 10 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

8. சாத்தான்குளம் மற்றும் திருவைகுண்டம் பேரூராட்சி சந்தைகள் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சி சந்தை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், உடன்குடி பேரூராட்சி சந்தை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

9. ஆழ்வார்திருநகரி குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாசரேத் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்
20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குளம் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பானிசாமி அறிவித்தார்.