தற்போதைய செய்திகள்

469 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி : அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் வழங்கினார்…

ராமநாதபுரம்:-

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உச்சிப்புளியில் சமூக நலத்துறை மற்றும் மீன்வளத் துறை ஆகிய துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் 469 பயனாளிகளுக்கு ரூ.2.93 கோடி மதிப்பில் விலையில்லா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினையும்,82 மீனவர்களுக்கு ரூ.19.06 லட்சம் அரசு மானியத்தில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியால் வெற்றி நடை போடும் கழக அரசு பெண்களின் நலனுக்காக பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில் ஏழை, எளிய பெண்களின் திருமண திருமாங்கல்யத்திற்கு விலையில்லா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 469 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் விலையில்லா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 2018-2019-ம் நிதியாண்டில் இதுவரை 3,180 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 49 லட்சம் மதிப்பில் நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

அம்மா வழியில் செயல்படும் கழக அரசு மீனவர்களின் உற்ற தோழனாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன் பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன் பிடி இறங்குதளம் மூக்கையூர் பகுதியில் ரூ.113 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடித் துறை அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் 19 படகுகளுக்கு ரூ.95 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மீன்பிடி தரைத்தளம் மற்றும் மீன்பிடி குறைவு காலங்களில் மீனவர்கள் நலனுக்காக உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர மீனவர்கள் பயன்பெறும் வகையில் 50 சதவீத அரசு மானியத்தில் மீனவர்களுக்கான குளிர்காப்பு பெட்டிகள், 40 சதவீத அரசு மானியத்தில் மீன்பிடி படகுகளுக்கு தேவையான இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 36 மீனவர்களுக்கு ரூ.10.07 லட்சம் அரசு மானியத்தில் மீன்பிடி படகுகளுக்கான இயந்திரங்களும், 42 மீனவர்களுக்கு ரூ.0.99 லட்சம் மானியத்தில் குளிர்காப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல தேசிய மீனவர் குழு விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 39 லட்சம் விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் ஏறத்தாழ 15.50 லட்சம் விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கில் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகை முதல்வரால் வழங்கப்பட்டது. தற்போதைய வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவு பகுதியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.