தற்போதைய செய்திகள்

5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்…

புதுடெல்லி:-

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் 112வது நிர்வாகக் குழுக் கூட்டம், 65வது பொது குழுக் கூட்டம் ஆகியன நடைபெற்றன. இக்கூட்டத்துக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையினரின் நலன், வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையினர் மாணவர்களுக்கு, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக மீண்டும் கல்வி போதிக்கப்படும். மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள மதரசாக்களில் இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி பாடங்கள் கற்றுக் கொடுக்க முக்கிய கல்வி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி கொடுக்கப்படும். இதன்மூலம் மதரசாக்களில் கல்வி பயிலுவோரும், பொது கல்வியில் தங்களது பங்களிப்பை அளிக்க இயலும். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தோரின் சமூக பொருளாதாரம், கல்வி அதிகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பெறுவது உறுதி செய்யப்படும்.இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். இதில் 50 சதவீத பயனாளிகள் மாணவிகளாக இருப்பார்கள்.

‘பேகம் ஹஸ்ரத் மஹால்’ மாணவிகள் கல்வித் உதவித் தொகை திட்டத்தில் சிறுபான்மையின நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் வரும் 5 ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

சிறுபான்மையின மாணவிகள் கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் தெரு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 60 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

கல்வி கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தின்கீழ், பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பாலிடெக்னிக்குகள், பெண்கள் விடுதிகள், குருகுல மாதிரி உறைவிட பள்ளிகள், பொது சேவை மையங்கள் ஆகியவை போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர், பார்ஸி இன மக்கள் மாநில அரசுத் துறைகள், வங்கித் துறை, ரெயில்வே, மத்திய அரசு துறைகள் சார்ந்த போட்டித் தேர்வுகளில் பங்கு பெற இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.